கண்டி , ஹசலக்க பிரதேசத்தில் பாடசாலை மாணவர்களிடமிருந்து சுமார் 30 தோட்டாக்கள் நேற்று புதன்கிழமை (19) கைப்பற்றப்பட்டதாக ஹசலக்க பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது, ஹசலக்க பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றிற்கு அருகில் விளையாடிக்கொண்டிருந்த பாடசாலை மாணவர்கள் சிலர், மரப்பலகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தோட்டாக்கள் இருப்பதை கண்டு அதனை சரிசமமாகப் பிரித்துக்கொண்டு தங்களது வீடுகளுக்குச் சென்றுள்ளனர்.அவர்களில் ஒரு மாணவன் தனது வீட்டிற்குச் சென்று சமையலறையில் இருந்த அடுப்பில் தோட்டாக்களை வைத்துள்ளான். இதன்போது, அந்த தோட்டாக்கள் திடீரென வெடித்துள்ளன.சத்தத்தைக் கேட்ட வீட்டின் உரிமையாளர்கள் இது தொடர்பில் பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாடசாலை மாணவனிடன் விசாரணை நடத்திய போது, மரப்பலகைகள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டமையும் ஏனைய மாணவர்கள் அதனை சரிசமமாகப் பிரித்துக்கொண்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றமையும் தெரியவந்துள்ளது.இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் சிலர் இணைந்து, சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று சோதனையிட்டு 30 தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர்.இது தொடர்பில் ஹசலக்க பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.