அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாக ஆங்கிலத்தை அறிவிக்க விரைவில் நிறைவேற்று (Executive Order) ஆணையை வெளியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.வெள்ளை மாளிகை உயர் அதிகாரியொருவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.ஆங்கில மொழியை அதிகாரபூர்வ மொழியாக அறிவிப்பது இது அமெரிக்காவின் வரலாற்றில் முதல் முறை அமையவிருக்கிறது.ஆங்கிலம், அமெரிக்காவில் முன்னணி மொழி – ஆனால் அதிகாரப்பூர்வமான மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை.அமெரிக்காவின் உத்தியோகபூர்வ மொழியாக ஒன்றும் நிர்ணயிக்கப்படவில்லை, ஆனால் 32 மாநிலங்கள் ஆங்கிலத்தையே அவர்களின் அதிகாரப்பூர்வ மொழியாக அமுல்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.அமெரிக்காவில் ஆங்கிலத்திற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பல முறை ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி பில் கிளிண்டன் உருவாக்கிய சிறுபான்மை மொழிகளுக்கான ஆதரவுத் திட்டங்களை (federal language assistance programs) டிரம்ப் தனது ஆணையின் மூலம் ரத்து செய்யவுள்ளார் என வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.சட்டவிரோத குடியேற்றத்திற்கு எதிராக பல நிறைவேற்று உத்தரவுகளை டிரம்ப் வெளியிட்டுள்ளார்.ஆங்கில மொழியை அதிகாரபூர்வ மொழியாக நிர்ணயிக்கும் ஆணையை எப்போது வெளியிடுவார் என்பதற்கான சரியான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.ஆனால், இது அமெரிக்காவின் மொழி கொள்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.