Home » ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தோல்வி – சர்வதேச ஊடகங்கள் தகவல்

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தோல்வி – சர்வதேச ஊடகங்கள் தகவல்

by newsteam
0 comments
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தோல்வி - சர்வதேச ஊடகங்கள் தகவல்

ஜெனீவாவின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், அண்மையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தோல்வியடைந்துள்ளதாக சர்வதேச ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறல் தொடர்பில் மற்றொரு தீர்மானம், பேரவையில் நிறைவேற்றப்பட்டது. வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட இந்தத் தீர்மானம், மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் போர்க்குற்ற ஆதாரங்களைச் சேகரிக்கும் திட்டத்தின் அதிகாரத்தை மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. இருப்பினும், இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் அதற்குப் பதிலாக, இந்தத் தீர்மானம் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், சர்வதேச ஊடகம் சுட்டிக் காட்டியுள்ளது.அதற்கமைய, உலகின் மிகவும் சக்திவாய்ந்த மனித உரிமைகள் அமைப்பு மீண்டும் ஒருமுறை இலங்கையின் போர்க் குற்றவாளிகளைப் பொறுப்பேற்க வைப்பதிலிருந்து தவறிவிட்டதாகவும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.போர்க் குற்றங்களுக்கு எந்தவொரு பொறுப்புக்கூறலையும் வழங்குவதற்கான கொழும்பின் எதிர்ப்பு, வழமைபோன்றே மிகவும் வெளிப்படையானதாகத் தோன்றியது. அத்துடன், இந்தத் தீர்மானம் இலங்கையின் உள்நாட்டு வழிமுறைகளில் மீண்டும் நம்பிக்கை வைப்பதற்கு வழி வகுத்துள்ளது. எனவே இந்தச் செயல்முறை, ஆழமான குறைபாடுடையவையாகவும், பாதிக்கப்பட்டவர்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டதாகவும், இலங்கை அரசுக்கு ஒரு வெற்று வெள்ளையடிப்பாகவும் உள்ளது.எனினும் கொழும்பில் பொறுப்பேற்றுள்ள புதிய ஆட்சியின் ‘நேர்மையான நகர்வுகளை மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது. அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டமை நிச்சயமாக இலங்கையின் தெற்கிலுள்ள சிங்கள அரசியல் ஸ்தாபனத்தை உலுக்கியுள்ளது. தமிழர் பிரச்சினை, பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிப்பதாகவும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிப்பதாகவும், இறுதியாக இன மோதலுக்கு ஒரு தீர்வை வழங்குவதாகவும் அநுரகுமார திசாநாயக்க உறுதியளித்துள்ளார்.ஆயினும்கூட, ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்திற்கும் மேலாகியும், வாக்குறுதியளிக்கப்பட்ட சீர்திருத்தத்தில் சிறிதளவேனும் நிறைவேறவில்லை என சர்வதேச ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.உலகின் மிகப்பெரிய தனிநபர் இராணுவங்களில் ஒன்றான இலங்கை இராணுவம், வடக்கு, கிழக்கு முழுவதும் பரந்த அளவிலான நிலங்களை இன்னும் ஆக்கிரமித்துள்ளது.

காணாமல் போன தங்கள் அன்புக்குரியவர்கள் பற்றிய தகவல்களைக் கோரி தமிழ் தாய்மார்கள் தங்கள் போராட்டங்களைத் தொடர்கின்றனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் தொடர்கின்றன.ராஜபக்சக்களின் சிங்கள தேசியவாத சொல்லாட்சியிலிருந்து திசாநாயக்கவின் மொழி நிச்சயமாக மென்மையாகி விட்டாலும், அதன் பின்னணியில் உள்ள உந்து சக்தி அரசியலில் நீடிக்கிறது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிலும் கூட, இலங்கை அரசாங்கம் அதற்கு முந்திய ஆட்சிகளைப் போலவே, தீர்மானத்தை நிராகரிப்பதிலும், சர்வதேசமயமாக்கப்பட்ட பொறுப்புக்கூறல் பொறிமுறையை நோக்கிய எந்தவொரு நகர்வுக்கும் செல்வதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தது. இதனால் தமிழர்களின் சீற்றம் அதிகரிக்கிறது. எனவே, ஜெனீவாவின் தீர்மானம், தமிழர்களின் அழைப்புகள், செவிடர் காதில் விழுந்ததையே தெளிவுபடுத்தியது. அத்துடன் தமிழ் மக்கள், ஜெனிவாவின், கடைசி தீர்மானத்தை ஒரு துரோகமாக நினைப்பதாகவும் சர்வதேச ஊடகம் கூறுகிறது. ஐக்கிய நாடுகளின் தொடர்ச்சியான மேற்பார்வை வரவேற்கத் தக்க நடவடிக்கையாகத் தோன்றினாலும், பொறுப்புக்கூறலுக்கான பாதை இப்போது உலக அமைப்புக்கு வெளியில் சென்றுள்ளது. இந்தநிலையில், நிலையான எதிர்கால அமைதி கட்டியெழுப்பப்பட வேண்டும். அத்துடன் 2009ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்ற குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட முடியாது.எனவே, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற பல்வேறு உலகளாவிய மன்றங்களுக்கு நகர்த்த வேண்டும்.அதேநேரம், முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலைகளுக்குப் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை செயல்பட முடியாவிட்டால், மற்றவர்கள் செயற்பட வேண்டும் என்றும் சர்வதேச ஊடகம் வலியுறுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!