மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் பணியாற்றும் சிற்றூழியர் ஒருவரால் முன்னெடுக்கப்பட்டு வந்த, சட்டவிரோத மருந்து விநியோக செயற்பாடு முறியடிக்கப்பட்டுள்ளது.வெளிநோயாளர் பிரிவில் பணியாற்றும் குறித்த சிற்றூழியர், மருத்துவர்கள் வழங்குவதை போன்ற போலி மருந்துச் சீட்டுக்களை வெளியாருக்கு வழங்கி, அதன் ஊடாக மருத்துவமனை மருந்தகத்தில், மருந்துகளை பெற்றுக்கொள்வதற்கு உதவி புரிந்துள்ளார்.இதனூடாக, அதிக விலையில் விற்பனை செய்யப்படும் வலி நிவாரணி மருந்துகளை, குறித்த ஊழியர், வெளியாருக்கு பெற்றுக்கொடுத்து வந்துள்ளார்.
இதற்காக வெளியாரிடம் இருந்து அவர் பணம் பெற்றுக்கொண்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, மருத்துவமனைக்கு சென்ற காவல்துறையினர், சந்தேகநபரான சிற்றூழியரை இன்று கைது செய்துள்ளனர்.