உடல்நிலை சரியில்லாமல் அலுவலகத்தில் ‘மெடிக்கல் லீவு’ எனப்படும் மருத்துவ விடுப்பு கேட்ட 40 வயது ஊழியர் ஒருவர், அடுத்த 10 நிமிடங்களில் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக, கே.வி. ஐயர் என்பவர் தன் சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:என் அலுவலகத்தில் பணிபுரியும் ஷங்கர் என்பவர் போன் செய்து , முதுகு வலி இருப்பதால் மருத்துவ விடுப்பு எடுத்துக் கொள்வதாகக் கூறினார். இது வழக்கமாக, ஊழியர்கள் சொல்லும் காரணம் என்பதால், நானும் சரி என்று கூறினேன்.இது காலை 8:37 மணிக்கு நடந்தது. அடுத்து, காலை 11:00 மணிக்கு, என் மொபைல் போனுக்கு அழைப்பு வந்தது. எடுத்து பேசினால், ஷங்கர் மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி வந்தது.நான் அதை நம்பவில்லை. அலுவலகத்தில் பணிபுரியும் மற்றொரு நண்பரும் இதையே கூறினார். நானும், அவரும் ஷங்கர் வீட்டுக்கு சென்றோம். உண்மையிலேயே அவர் இறந்துவிட்டார். விடுப்பு குறித்து என்னிடம் தகவல் தெரிவித்த அடுத்த 10 நிமிடங்களில், அதாவது காலை 8:47 மணிக்கு அவர் உயிர் பிரிந்துள்ளது.
என் குழுவில் ஆறு ஆண்டுகளாக பணிபுரியும் ஷங்கருக்கு, எந்த கெட்ட பழக்கமும் இல்லை. திருமணமாகி மனைவி, குழந்தை உள்ளனர். வாழ்க்கை நிரந்தரம் இல்லை என்பது இதன் வாயிலாக உறுதியாகியுள்ளது. அதனால், அனைவரிடமும் மகிழ்ச்சியாக வாழ்வோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இருப்பினும், இந்த சம்பவம் எங்கு, எப்போது நடந்தது என்ற விபரங்கள், அந்தப் பதிவில் குறிப்பிடப் படவில்லை.