Home » யாழில் பனை மரங்கள் தறிப்பது தொடர்பான விடயங்கள் குறித்தான கலந்துரையாடல்

யாழில் பனை மரங்கள் தறிப்பது தொடர்பான விடயங்கள் குறித்தான கலந்துரையாடல்

by newsteam
0 comments
யாழில் பனை மரங்கள் தறிப்பது தொடர்பான விடயங்கள் குறித்தான கலந்துரையாடல்

பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாகவும் தறிக்கப்படுகின்ற பனைமரங்களுக்கான மீள் நடுகை செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (25.02.2025) பி.ப 3.15 மணிக்கு மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் அனர்த்தம் ஏற்படக்கூடிய பனைமரங்கள் காணப்படுமாயின் அவற்றினை ஐந்துபேர் கொண்ட குழுவொன்றினை அமைத்து அவர்கள் நேரில் சென்று பாா்வையிட்டு தறிப்பதற்கான அனுமதி வழங்குதற்கும் , அரச வீட்டுத்திட்டம், அரசசாா்பற்ற வீட்டுத்திட்டம் என்பவற்றினால் பிரதேச செயலகங்களினூடாக வழங்கப்படும் வீட்டுத்திட்டங்களுக்கு நிபந்தனைகளுடன் பனை மரம் தறிப்பதற்கு அனுமதி வழங்குவதற்கும் பனை அபிவிருத்தி சபைக்கு ஆலோசனை வழங்கியதுடன் , பனை அபிவிருத்தி சபையினால் யாழ் மாவட்டத்தில் பனம் விதை நடுவதற்கான இடங்கள் காணப்படுமாயின் அதற்கான இடஅமைவு தொடர்பான விடயத்தினை பிரதேச செயலாளர்களை அறிக்கையிடுமாறும் தெரிவித்தாா்.

பனைமரம் தறிப்பதற்கான கட்டுப்பாட்டுச்சட்டம் மற்றும் அனுமதி தொடர்பாக பிரதேச செயலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அதற்கான உடனடித் தீர்வுகள் தொடர்பான விடயங்களும் ஆராயப்பட்டன.இக் கலந்துரையாடலில் பனை அபிவிருத்தி சபைத் தலைவர் திரு வி. சகாதேவன் அவர்களும் கலந்து கொண்டார். மேலும் இக்கலந்துரையாலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி .உ.தர்சினி ,பிரதேச செயலாளர்கள், பனைஅபிவிருத்தி சபையின் முகாமையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!