Wednesday, April 16, 2025
Homeஇலங்கைஅத்துமீறி நுழைந்த பசு - பிரதேச சபை நுழைவாயிலில் அமர்ந்து உரிமையாளர் போராட்டம்

அத்துமீறி நுழைந்த பசு – பிரதேச சபை நுழைவாயிலில் அமர்ந்து உரிமையாளர் போராட்டம்

உரிமையாளரால் மேச்சலுக்காக கட்டவிழ்த்து விடப்பட்ட பசு மாடு ஒன்று வேலணை பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து தாவரங்களை தின்று சேதமாக்கியதால் குறித்த பசுமாட்டை பிரதேச சபையினர் சட்ட ரீதியாக பிடித்து கட்டிவைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலணை நகர்ப்பகுதியில் கால்நடை பண்ணை நடத்திவரும் பெண் உரிமையாளர் ஒருவர் பிரதேச செயலக நுழைபாதையை வழிமறித்து போராட்டம் ஒன்றை இன்று (09) முன்னெடுத்ததால் குறித்த பகுதியில் சிலமணி நேரம் குழப்பநிலை ஏற்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வேலணை நகர்ப் பகுதியில் பால் உற்பத்தியை மையமாக கொண்டு சுயதொழிலாக பசு மாடு வளர்ப்பில் ஈடுபட்டுவரும் பெண் ஒருவரது பசுமாடு ஒன்று கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், வேலணை நகர் பகுதியில் அமைந்துள்ள பிரதேச சபை வளாகத்துக்குள் நுழைந்து அங்கிருந்த சிறு தாவரங்களை சேதப்படுத்தியதாக கூறி பிரதேச சபையின் ஊழியர்களால் குறித்த பசுமாடு பிடிக்கப்பட்டு முதற்கட்ட நடவடிக்கையான உரிமையாளர் தேடி வரும் வரையான சட்ட விதிமுறைகளுக்கேற்ப தமது பராமரிப்பில் வைத்திருந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பசுமாட்டின் உரிமையாளர் இரண்டாவது நாளான இன்று பிரதேச சபையின் பொறுப்பில் குறித்த பசுமாடு இருப்பதை அறிந்துகொண்டு அதை பிரதேச சபை சட்டமுரணாக பிடித்து கட்டிவைத்துள்ளதாக தெரிவித்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாட்டை விடுவிக்குமாறு கோரி தான் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

மேலும் தான் மாடு வளர்ப்பு தொழிலை பல இலட்சங்கள் முதலீடு செய்து மேற்கொண்டுவரும் நிலையில், தற்போது நிலவும் வெப்பமான காலநிலையை கருத்தில் கொண்டு மாடுகளின் நலன்கருதி அவற்றை அவிழ்த்து விட்டதாகவும் அவ்வாறான நிலையில், ஒரு பசு மாடு குறித்த பிரதேச சபையின் வளாகத்துக்குள் சென்றதாக கூறி பிடித்து கட்டிவைக்கப்பட்டுள்ளது. இது சட்டமுரணானது. இவ்வாறான நிலை எமது தொழிலை பாதிக்கின்றது. எனவே சட்டத்துக்கு முரணாக பிரதேச சபையால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பசு மாட்டை தண்டங்கள் இன்றி விடுவிக்க வேண்டும் எனவும், இனிமேல் இவ்வாறு மாடுககள் பிடிக்கப்படக்கூடாது எனவும் கோரியே போராட்டத்தை முன்னெடுத்துள்ளேன் என தெரிவித்தார்.

இது தொடர்பில் வேலணை பிரதேச சபையின் செயலரிடம் கேட்டபோது. எமது பிரதேசத்தில் கால்நடைகளால் வருடாவருடம் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. கட்டாக்காலி மாடுகள் ஒருபுறமிருக்க வளர்ப்பு மாடுகள் கட்டவிழ்த்து விடப்படுவதால் ஏற்படும் பிரச்சினைகளும் நாளாந்தம் காணப்படுகின்றது.

இதேநேரம் வளர்ப்பு பிராணிகளை கட்டி வளர்க்க வேண்டியது உரிமையாளர்கள் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். குறிப்பாக வங்களாவடி சந்தி பகுதியை அண்டிய சூழலில் மாலை 6 மணிக்கு பின்னர் நாளாந்தம் 50இற்கு மேற்பட்ட மாடுகள் வீதிகளில் தமது இரவு நேரத்தை கழிக்கின்றன. இதனால் நாளாந்தம் விபத்துக்களும் ஏற்படுகின்றன. ஒருசில பாரிய விபத்துக்களும் ஏற்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:  ஜெர்மனியில் சோகம்: கூட்டத்தில் அதிவேகமாக புகுந்த கார் மோதி 28 பேர் படுகாயம்

இதேநேரம் வீட்டுப் பயிர்களை அழிப்பதாகவும் எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. குறித்த வீதியில் உறங்கும் மாடுகளில் அதிகமானவை வளர்ப்பு மாடுகளாகவே இருக்கின்றன. இதை கட்டுப்படுத்துமாறும் தொடர்ச்சியாக எமக்கு முறைப்பாடுகள் கிடைத்து வருகின்றன. நாம் மக்களின் நலன்களை கருத்திற்கொண்டே செயற்பட்டு வருகின்றோம். எமது சபைக்கு கட்டாக்காலி மாடுகளானாலும் சரி வளர்ப்பு மாடுகளானாலும் சரி ஆபத்துக்கள் மற்றும் சேதங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் அல்லது நுழைந்தால் பிடிப்பதற்கும் அதற்கு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கும் அதிகாரம் உண்டு.

கடந்த மாதம் நடைபெற்ற வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் உலவுகின்ற மாடுகள் மற்றும் கட்டாக்காலிகள் தொடர்பில் ஏன் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை? அல்லது அது தொடர்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதன்பின்னர் இவ்வாறான அசௌகரியங்களை உண்டுபண்ணும் கால்நடைகளை கட்டப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டது.

குறித்த கூட்டத்தில் எவரும் மாடுகளை பிடிக்க வேண்டாம், தண்டப்பணம் அறவிட வேண்டாம் என கூறவில்லை. நடவடிக்கை எடுக்குமாறே வலியுறுத்தியிருந்தனர். இதேவேளை குறித்த பெண் இவ்வாறான சம்பவம் தொடர்டபில் பலமுறை பிரதேச சபைக்கு தண்டம் செலுத்தியும் ஒரு தடவை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தண்டிக்கப்பட்டு எச்சரிக்கப்பட்டு தண்டமும் செலுத்திய ஒருவர். அவ்வாறான சம்பவம் ஒன்றே இன்றும் நடந்துள்ளது. நாம் சட்டத்தை தான் செய்தோம். எவரது கால்நடைகளும் இன்னொருவரது வீடுகளுக்கோ அல்லது பொது நிறுவனங்களின் வளாகத்துக்குள்ளோ சென்றால் அல்லது நாசங்களை ஏற்படுத்தினால் அதை பிடித்து அதற்கான நடவடிக்கை எடுக்க முடியும்.

எனவே வளர்ப்பு மாடுகளை ஒவ்வொருவரும் தத்தமது வளர்பிடங்களில் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டுமே தவிர அவற்றை கட்டவிழ்து விடுவது இவ்வாறான பிரச்சினைகளையே ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துடன் குறித்த பசு மாட்டின் உரிமையாளர் பிரதேச சபையின் சட்டங்களின் பிரகாரம் அதற்கான தண்டப்பணமாக 5,600 ரூபாவினை செலுத்தியே இன்றும் தனது பசுமாட்டை மீட்டுச் சென்றுள்ளார் என்றும் தெரிவித்திருந்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!