அரசாங்க சேவையில் உள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வு பெறச் செய்யும் முடிவை அமல்படுத்துவதைத் தடுக்கும் வகையில், மேன்முறையீட்டு நீதிமன்றம் முன்னர் பிறப்பித்த இடைக்காலத் தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று ரத்து செய்துள்ளது.மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மற்றொரு உத்தரவையும் பிறப்பித்துள்ளது.மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவு சட்டத்திற்கு முரணானது என்றும், அது செல்லாதது என்றும் கூறி, சட்டமா அதிபர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை விசாரித்த பின்னர், உயர் நீதிமன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.யசந்த கோடகொட, ஜனக் டி சில்வா மற்றும் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகிய 3 பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாமே இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.