இணையத்தளம் மற்றும் தொலைபேசிகள் ஊடாக கடன் பெறுவது தொடர்பாக காவல்துறை மக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.இணையத்தளங்கள் அல்லது தொலைபேசிகள் ஊடாக கவனத்தை ஈர்க்கும் வகையில் விளம்பரப்படுத்தப்பட்டு அல்லது நேரடி தொலைபேசி அழைப்புகள் மூலம் எவ்வித சாட்சிகளுமின்றி உடனடியாக பணத்தைப் பெற்றுக்கொள்ளும் முறையைக் காண்பித்து கடன் வழங்க முன்வரும் நிறுவனங்கள் தொடர்பாக அவதானித்து வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.இத்தகைய கடன்களை மக்கள் பெற்றுக்கொள்ளும் போது பெறப்படும் வட்டி வீதம் மற்றும் கடனை மீண்டும் செலுத்த வேண்டிய காலங்கள் தொடர்பாக எவ்வித முழுமையான தகவல்களும் முன்னறிவித்தலுமின்றி கடன் வழங்குவதால் கடன் பெறுபவர்கள் பல சிரமங்களுக்கு முகங்கொடுப்பதாகவும் மன அழுத்தங்களுக்கு உள்ளாகுவதாகவும் தமக்குப் பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது. மேலும், சில நிறுவனங்கள் கடனை மீளப்பெறும் கட்டத்தில் அதிகளவிலான வட்டிகளை வசூலிப்பதாகவும், தொடர்ந்தும் தொலைபேசி அழைப்புகள் மூலம் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும், காவல்துறை சுட்டிக்காட்டியுள்ளது.இவ்வாறான முறையில் இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை காவல்துறை, இலங்கை மத்திய வங்கியின், வங்கியற்ற நிதி நிறுவனங்களை ஒழுங்குப்படுத்தல் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தை தொடர்பு கொண்டு விசாரணைகள் மேற்கொண்ட போது, இவ்வாறான பல நிறுவனங்கள் இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குபடுத்தல் முறைமையை கடைபிடிக்காமல் செயற்படுவதாகவும், கடன் வழங்கும் நிறுவனங்கள் தொடர்பாக ஒழுங்குபடுத்தல் முறைமையை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.எனவே, இணையத்தளம் மற்றும் தொலைபேசி ஊடாக உடனடியாக கடன் பெறும் போது அவதானத்துடனும், அதன் நிபந்தனைகளை முறையாக அறிந்து அதன் பின்னர் சேவையை பெற்றுக் கொள்ளுமாறும் இலங்கை காவல்துறை பொதுமக்களுக்கு அறியத்தருகின்றது.
இணையம் வழி கடன் மோசடிகள் அதிகரிப்பு – கவனமாக இருக்குமாறு காவல்துறை வேண்டுகோள்
30