தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், பண்டிகையை கொண்டாட அனைவரும் தயாராகி வருகின்றனர். இந்நிலையில், ‘ரெடிட்’ சமூக வலைதளத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் வெளியிட்ட பதிவு இணையவாசிகளை கண்கலங்க வைத்துள்ளது. தனக்கு புற்றுநோய் 4-வது கட்டத்தில் இருப்பதாகவும், எதிர்வரும் தீபாவளியே தனக்கு கடைசி திபாவளியாக இருக்கக் கூடும் என்றும் அந்த இளைஞர் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது;-
“புற்றுநோய் வென்றுவிட்டது, நான் விடைபெறுகிறேன். கடந்த 2023-ம் ஆண்டு எனக்கு பெருங்குடல் புற்றுநோய் 4-வது கட்டத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இனிமேல் முயற்சி செய்வதற்கு எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். இந்த ஆண்டின் இறுதிவரை நான் இருக்கமாட்டேன்.தீபாவளி வரப்போகிறது. தெருக்களில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இவற்றை நான் பார்ப்பது இதுவே கடைசி முறை என்பதை உணர்வது கடினமாக இருக்கிறது. இந்த விளக்குகள், சிரிப்பு மற்றும் சத்தங்களை விட்டு பிரிவது எனக்கு வருத்தமாக இருக்கும். உலகம் தனது போக்கில் இயங்கிக் கொண்டிருக்கும்போது, எனது வாழ்க்கை அமைதியாக முடிந்து கொண்டிப்பதை நினைக்கும்போது விசித்தரமாக இருக்கிறது. அடுத்த ஆண்டு, நான் ஒரு நினைவாக மட்டுமே இருப்பேன். அப்போது யாராவது என் இடத்தில் விளக்கு ஏற்றுவார்கள் என்பது எனக்கு தெரியும்.சில இரவுகளில் நான் வழக்கம்போல் எனது எதிர்காலத்திற்காக திட்டமிடுகிறேன். இது வேடிக்கையாக இருக்கிறது. எனக்கு கனவுகள் கூட இருந்தன, உங்களுக்கு தெரியுமா? நான் இன்னும் நிறைய பயணம் செய்ய விரும்பினேன், சொந்தமாக ஏதாவது ஒன்றைத் தொடங்க விரும்பினேன், எல்லாம் சரியாகிவிட்டால் ஒரு நாயை தத்தெடுக்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால் இப்போது என்னிடம் போதிய நேரம் இல்லை என்பது நினைவுக்கு வரும்போது அனைத்து எண்ணங்களும் கலைந்து போய்விடுகின்றன. நான் வீட்டில் இருக்கிறேன், என் பெற்றோரின் முகத்தில் சோகம் தெரிகிறது.நான் ஏன் இதை பதிவிடுகிறேன் என்று எனக்கு தெரியவில்லை. அடுத்து என்ன வருகிறதோ அதில் நான் அமைதியாக மறைந்து போவதற்க முன்பு ஒரு சிறிய தடயத்தை விட்டுச் செல்வதற்காக இதையெல்லாம் சத்தமாகச் சொல்லலாம் என்று நினைக்கிறேன். விடைபெறுகிறேன்.”
இவ்வாறு அந்த இளைஞர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த இணையவாசிகள், “அற்புதம் என்று ஒன்று இருந்தால் அது உங்கள் வாழ்க்கையில் நிகழட்டும்”, “கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார், உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்” என்று பதிவிட்டு வருகின்றனர். மேலும், “வாழ்க்கையின் இன்பத்தை நாம் எவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்கிறோம். ஒரு விரிவான பார்வையில் வாழ்க்கையை பார்க்கும்போது நமது தினசரி சண்டைகளும், பிரச்சினைகளும் அர்த்தம் இல்லாமல் போய்விடுகின்றன” என்று இணையவாசிகள் பதிவிட்டு வருகின்றனர்.