Home » இந்தியாவில் குழந்தை இல்லாததால் தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை -கணவர் உட்பட 3 பேர் கைது

இந்தியாவில் குழந்தை இல்லாததால் தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை -கணவர் உட்பட 3 பேர் கைது

by newsteam
0 comments
இந்தியாவில் குழந்தை இல்லாததால் தலையில் கல்லைப்போட்டு பெண் கொலை -கணவர் உட்பட 3 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மலபாத் கிராமத்தை சேர்ந்தவர் காமண்ணா கொனகான்டே. இவரது மனைவி ஜெயஸ்ரீ. இந்த தம்பதியின் மகன் சந்தோஷ். இவருடைய மனைவி ரேணுகா(வயது 27). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 17-ந் தேதி இரவு கிராமத்தின் அருகே உள்ள சாலையில் ரேணுகா தலையில் பலத்தகாயங்களுடன் பிணமாக கிடந்தார். தன்னுடன் மோட்டார் சைக்கிளில் வந்த போது சக்கரத்தில் சேலை சிக்கியதால் இறந்து விட்டதாக சந்தோஷ், அவரது தந்தை காமண்ணா ஆகியோர் அதானி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.உடனே போலீசாரும் விரைந்து சென்று ரேணுகாவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். ஆனால் விபத்து நடந்திருப்பதற்கான எந்த ஆதாரங்களும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் சந்தேகத்தின் பேரில் சந்தோஷ், அவரது பெற்றோரிடம் விசாரித்தனர்.அப்போது ரேணுகா விபத்தில் சிக்கி சாகவில்லை என்றும், தாங்கள் தான் கொலை செய்தோம் என்றும் 3 பேரும் தெரிவித்தார்கள். இதையடுத்து, சந்தோஷ், காமண்ணா, ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதாவது ரேணுகாவுக்கு குழந்தை இல்லை. இதற்கு ரேணுகா தான் காரணம் என்று சந்தோசிடம் அவரது பெற்றோரான காமண்ணா, ஜெயஸ்ரீ கூறி வந்துள்ளனர். மேலும் அவரை கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். இதற்காக கடந்த 17-ந் தேதி இரவு ரேணுகாவை வீட்டில் இருந்து கிராமத்தின் அருகே அழைத்து சென்றுள்ளனர்.அங்கு வைத்து காமண்ணா, ஜெயஸ்ரீ ஆகியோர் தலையில் கல்லைப்போட்டும், சேலையால் கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கிறார்கள். அதன்பிறகு, விபத்தில் அவர் இறந்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. கைதான தம்பதி மற்றும் மகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!