6 வயது சிறுமியை அவரது மாமா பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் ஒன்று இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.சத்திஸ்கர் மாநிலம் துர்க் பகுதியைச் சேர்ந்த 6 வயது சிறுமி, நவராத்திரி பண்டிகையை கொண்டாட 5ஆம் திகதி தனது பாட்டி வீட்டுக்குச் சென்றுள்ளர். பாட்டி வீட்டுக்குச் சென்ற சிறுமி, வீட்டுக்கு வராததால் அவரது பெற்றோர் பல இடங்களில் தேடி வந்துள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காததால் பொலிஸில் முறைப்பாடு அளித்தனர்.அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், கார் ஒன்றின் டிக்கியில் சிறுமி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு கிடந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர். அந்த உடலை மீட்டு, கார் உரிமையாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தினர். ஆனால், அந்த அந்த கொலையை தான் செய்யவில்லை என மறுத்துள்ளார்.இந்த சம்பவத்தால் கோபமடைந்த ஊர் மக்களும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்ப உறுப்பினர்களும், பொலிஸ் நிலையத்திற்கு வெளியே கூடி, பாதிக்கப்பட்டவரின் உடலை சுமந்து போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம், வன்முறையாக மாறியது. பொலிஸ் வாகனத்தின் மீது கற்களை வீசி தீ வைத்து எரித்தனர். இதனால் கூட்டத்தை கலைக்க அவர்கள் மீது பொலிஸ் தடியடி நடத்தியது.
இதற்கிடையில், சிறுமியின் மாமா சோமேஷ் யாதவ் மீது பொலிஸாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவரிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் பல அதிர்ச்சிகரமான செய்திகள் கிடைத்தது. சம்பவம் நடந்த தினத்தன்று, சிறுமியின் பாட்டியும் மற்றும் அவரது உறவினர்கள் அனைவரும் கோயிலுக்குச் சென்றுள்ளனர். இதனை பயன்படுத்தி வீட்டில் தனியாக இருந்த சிறுமியை, அவரது மாமா சோமேஷ் யாதவ் வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதன் பின்னர், அந்த சிறுமியை கொடூரமாகக் கொலை செய்துவிட்டு பக்கத்து வீட்டுக்காரரின் கார் டிக்கியில் உடலை மறைத்துள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து, சோமேஷ் யாதவை பொலிஸார் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.