இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல்வேறு துறைகளில் கைச்சாத்திடப்பட்ட 07 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் பரிமாற்றம் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னிலையில் இடம்பெற்றது.இந்திய-இலங்கை உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கும் வகையில் வலுசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய துறைகள் மற்றும் நன்கொடை உதவிகள் தொடர்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாற்றப்பட்டன.
புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பின்வருமாறு.
01. மின்சார இறக்குமதி/ஏற்றுமதிக்கான உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்ட (HDVC) இடை இணைப்பை செயல்படுத்துவதற்கான இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
02. டிஜிட்டல் பரிமாற்றத்திற்காக மக்கள் மட்டத்தில் செயல்படுத்தப்படும் வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளர் வருண ஸ்ரீ தனபால மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
03. திருகோணமலையை வலுசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இலங்கை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால, இந்தியவெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத் தூதுவர் காலித் நசார் அலமேரி ஆகியோர் இந்தப் பரிமாற்றத்தை மேற்கொண்டனர்.
04. பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். சம்பத் துய்யகொந்த மற்றும் இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
05. இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சிற்கும் இலங்கை சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சிற்கும் இடையிலான சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
06. மருந்து விதிமுறைகள் ஒத்துழைப்புக்காக இந்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சின் மருந்து விதிமுறைகள் ஆணைக்குழுவிற்கும் இலங்கையின் தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபைக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
07. கிழக்கு மாகாணத்தில் பல்துறை நன்கொடை உதவிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் பரிமாறிக் கொள்ளப்பட்டது.
இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட இந்தியக் தூதுக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.