அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள் நேற்று நாடு திரும்பினர்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், “அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களது நாடுகளுக்கே திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பதவி ஏற்பின்போதே தெரிவித்த நிலையில், சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நிர்வாக உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டார். அதன்படி அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 7.25 லட்சம் பேர் இந்தியர்கள்.
அவர்களில் 20,000 இந்தியர்களை நாடு கடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 27ம் திகதி இந்திய பிரதமர் மோடி அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களை திரும்ப அழைப்பது பற்றி மோடியுடன் பேசியது குறித்த கேள்விக்கு “இந்த விவகாரத்தில் இந்தியா சரியானதை செய்யும்” என டிரம்ப் பதிலளித்திருந்தார். அதேபோல் கடந்த மாதம் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வௌியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களிடம், அவர்கள் இந்தியர்கள்தான் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் இருந்தால் திரும்ப அழைத்து கொள்ளப்படுவார்கள்” என கூறியிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியிருந்த 205 இந்தியர்கள் நேற்று முன்தினம் நாடு கடத்தப்பட்டதாக தகவல்கள் வௌியாகின.அவர்கள் அனைவரும் டெக்சாஸ் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் சி-17 ராணுவ விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் ராணுவ விமானத்தில் ஏறும்போது இந்தியர்கள் அனைவரும் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டனர்.கைவிலங்குடன் இந்தியர்கள் விமானத்தில் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்களுடன் அமெரிக்க சி-17 ராணுவ விமானம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள குரு ராம்தாஸ் ஜி சர்வதேச விமான நிலையத்தில் நேற்று மதியம் 1.55 மணிக்கு தரையிறங்கியது. இவர்களில் 30 பேர் பஞ்சாப் மாநிலத்தையும், 33 பேர் அரியானா, குஜராத் மாநிலங்களையும், 3 பேர் மகாராஷ்டிரா, உத்தரபிரதேச மாநிலங்களையும், 2 பேர் சண்டிகரையும் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.