நாம் கோவிலுக்கு சென்றால் உடல் நலம், தொழிலில் முன்னேற்றம், செல்வ செழிப்பு, பதவி உயர்வு, குழந்தை வேண்டுதல், குழந்தைகளின் முன்னேற்றம் இப்படி பல பல வேண்டுதல்களை கடவுளிடம் முறையிட்டு வேண்டிக்கொள்வோம்.அந்த வேண்டுதலுக்காக சிலர் அங்கப்பிரதட்சணம், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என்று செய்வர். இன்னும் சிலர் கோவிலுக்கு தேவையான பொருட்கள் வாங்கிக்கொடுத்தல், கோவிலுக்கு கைங்கர்யம் செய்தல் என்றும் இருப்பர். ஆனால் கர்நாடகாவில் ஒருவர், விபரீதமாக தனது மாமியார், சீக்கிரம் இயற்கை எய்த வேண்டும் என்று வேண்டுதல் வைத்துள்ளார்.கர்நாடக மாவட்டம் கலபுர்கி அடுத்துள்ள கதர்கா கிராமத்தில் பாக்யனாவதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு வேண்டுதலை வைத்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம்.அப்படி உண்டியலில் சேர்ந்த பணத்தை எண்ணுவதற்காக அந்த கோயில் நிர்வாகத்தை சேர்ந்தவர்கள், உண்டியலை நேற்று திறந்துள்ளனர். அப்போது உண்டியலில் இருந்த இருபது ரூபாய் நோட்டு ஒன்றில், “கடவுளே… என் மாமியார் சீக்கிரம் இறக்க வேண்டும்” என்று எழுதியிருந்தது அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது. இந்த ரூபாய் நோட்டின் புகைப்படம், தற்பொழுது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு, விமர்சனங்களை எதிர்கொள்கிறது.