கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆர்.எம்.வி. 2-வது ஸ்டேஜ் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் அனூப்குமார் (வயது 38). இவரது மனைவி ராக்கி (35). இந்த தம்பதிக்கு 5 வயதில் பிரியங்கா என்ற மகளும், 2 வயதில் பிரியங்க் என்ற ஆண் குழந்தையும் இருந்தது. அனூப்குமாரின் சொந்த ஊர் உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் ஆகும். கடந்த 2 ஆண்டுகளாக பெங்களூருவில் அவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.அனூப்குமார் கம்ப்யூட்டர் என்ஜினீயர். பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். அனூப்குமாரின் ஒரு குழந்தை மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதற்காக ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு சிகிச்சை பெற்று வந்தார்கள். மேலும் 2 குழந்தைகளை பார்த்துக்கொள்ள, 2 பெண்களை அனூப்குமார் வேலைக்கு வைத்திருந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலைக்கார பெண்களிடம், புதுச்சேரிக்கு குடும்பத்துடன் செல்ல இருப்பதாகவும், அதனால் காலையிலேயே வந்து விடும்படி அனூப்குமார் கூறியிருந்தார். அதன்படி, 2 பேரில் ஒருவர் காலையிலேயே வேலைக்கு வந்தார். அவர் வீட்டு கதவை தட்டியும், யாரும் கதவை திறக்கவில்லை.இதையடுத்து, கதவை அந்த பெண் தள்ளியபோது கதவும் திறந்துள்ளது. உடனே அவர் உள்ளே சென்று பார்த்தபோது அனூப்குமார், அவரது மனைவி ராக்கி ஆகியோர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டு இருந்தார்கள். சிறுமி பிரியங்கா, குழந்தை பிரியங்க் ஆகியோர் வாயில் நுரை தள்ளிய நிலையில் தரையில் பிணமாக கிடந்தனர். இதை கண்டு வேலைக்கார பெண் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி அவர், அக்கம்பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
அவர்கள் சதாசிவ நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அனூப்குமார் உள்பட 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.அப்போது அனூப்குமார் தன்னுடைய 2 குழந்தைகளுக்கும் விஷத்தை கொடுத்து கொன்றுவிட்டு, பின்னர் அவர் தனது மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. ஆனால் தற்கொலை கடிதம் எதுவும் போலீசாருக்கு கிடைக்கவில்லை.அதே நேரத்தில் தன்னுடைய தம்பிக்கு நேற்று முன்தினம் இரவே தான் தற்கொலை செய்துகொள்ள போவதாக அனூப்குமார் இ-மெயில் அனுப்பி வைத்தது தெரியவந்துள்ளது. அனூப்குமார், அவரது மனைவி சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்ததாகவும், அவர்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.அதேநேரத்தில் கடன் பிரச்சினை காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள். 2 குழந்தைகளை கொன்று மனைவியுடன் கம்ப்யூட்டர் என்ஜினீயர் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.