சிறுமியை திருமணம் செய்த விவசாயிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், இருதரப்பு பெற்றோருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கயத்தார் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன் (31), விவசாயி. கடந்த 2019ல் இவருக்கும், புதுச்சேரி கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் இருதரப்பு பெற்றோரின் முன்னிலையில் திருமணம் நடந்தது. மைனர் என தெரிந்தும் ஜானகிராமன் அவரை திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இருதரப்பு பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் இது நடந்துள்ளது. 4 மாதங்களுக்கு பிறகு இது, திருக்கனூர் போலீசுக்கு தெரியவந்தது.இதுகுறித்து திருக்கனூர் போலீசார், போக்சோ மற்றும் குழந்தை திருமண சட்டத்தின் கீழ் ஜானகிராமன் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மைனர் பெண்ணை திருமணம் செய்து கொடுத்ததால் குழந்ைத திருமண சட்டத்தின் கீழ் ஜானகிராமனின் தந்தை கிருஷ்ணமூர்த்தி, தாய் லட்சுமி, சிறுமியின் தந்தையான கூனிச்சம்பட்டு பகுதியை சேர்ந்த வீரபுத்திரசாமி, விக்கிரவாண்டியை சேர்ந்த சித்தி தனலட்சுமி ஆகியோர் மீதும் வழக்கு பதிந்தனர். இவ்வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நீதிபதி சுமதி முன்னிலையில் விசாரணைக்கு வந்த இவ்வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஜானகிராமனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், குழந்தை திருமண சட்டத்தின் கீழ் 2 ஆண்டு சிறை தண்டனையும் ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் ₹20 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அதேபோல் சிறுமியை திருமணம் செய்து கொடுத்த பெற்றோர்கள் உள்ளிட்ட மற்ற 4 பேருக்கும் 2 ஆண்டு சிறை தண்டனையும், தலா ₹10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ₹4 லட்சம் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.