தமிழக வெற்றிக்கழகத்தின் கட்சிக்கொடி இன்று அறிமுகம்

தமிழக வெற்றிக் கழக கொடியை இன்று அறிமுகப்படுத்துகிறார் விஜய். கட்சிக் கொடியின் வண்ணம் என்ன? இலச்சினை என்ன என தொண்டர்கள் இடையே எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இரண்டு போர் யானைகள் இருக்கும் விதமாக கொடி அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த நிலையில் இன்று கொடி ஏற்றிய பின் மேற்கொள்ளப்பட உள்ள உறுதிமொழி வெளியாகி உள்ளது. இன்று விஜய் கொடி ஏற்றியதும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பின்வரும் உறுதி மொழியை படிக்க உள்ளனர்.

அதன்படி, நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன். மக்களாட்சி, மதச்சார்பின்மை. சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழியை கூறப்பட்டு உள்ளது.

நடிகர் விஜய் வெளியிட்டுள்ள அறிவிப்பில், விஜய் மக்கள் இயக்கம் பல வருடங்களாக தன்னால் இயன்ற வரையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், சமூக சேவைகளையும், நிவாரண உதவிகளையும் செய்துவருவது நீங்கள் அனைவரும் அறிந்ததே. இருப்பினும், முழுமையான சமூக, பொருளாதார, அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர ஒரு தன்னார்வ அமைப்பினால் மட்டும் இயலாத காரியம் அதற்கு அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here