கர்நாடக மாநிலம் தாவன்கரே மாவட்டம் ஜகல்பூரைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவருக்கும் தும்கூர் மாவட்டம் சிரா பகுதியைச் சேர்ந்த அனிதா என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவானது. இவர்களது திருமணம் நேற்று முன்தினம் நடைபெறுவதாக இருந்தது.கடந்த சனிக்கிழமை இரவு ஹிரியூர் நகரில் பெங்களூரு சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மணமகன், மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் பலர் கலந்துகொண்டனர்.அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. ஏராளமானோர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். விருந்து முடியும் தருவாயில் சிலர் வந்து சாப்பிட அமர்ந்தனர். அப்போது அவர்களுக்கு கேட்டரிங் ஊழியர்கள் முறையாக குடிநீர் வழங்கவில்லை எனக்கூறி மணமகன், மணமகள் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டது.
இரவில் தொடங்கிய இந்த தகராறு காலை வரை நீடித்தது. எவ்வளவு பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பினரும் சமாதானம் அடையவில்லை.ஒரு கட்டத்தில் மணமகனும், மணமகளும் தகராறில் ஈடுபட்டனர். உறவினர்கள் சமாதானம் செய்ய முயன்றும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. இதையடுத்து திருமணம் நிறுத்தப்பட்டது. பந்தியில் தண்ணீர் பரிமாறுவதில் ஏற்பட்ட குளறுபடியால் திருமணம் நிறுத்தப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.