உத்தரபிரதேச மாநிலம் சாந்த்கபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பப்லு. இவரது மனைவி ராதிகா. இவர்கள் இருவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.ராதிகாவுக்கு ஏற்கனவே தனது கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருடன் காதல் இருந்து வந்தது. திருமணத்துக்கு பிறகும் அவர்களுக்கு இடையே நட்பு நீடித்தது. பப்லு வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். இந்த சமயத்தை பயன்படுத்தி காதலர்கள் இருவரும் ரகசியமாக அடிக்கடி சந்தித்து வந்தனர். இந்த விஷயம் அரசல் புரசலாக உறவினர்களுக்கு தெரியவந்தது. இது பற்றி அவர்கள் பப்லுவிடம் தெரிவித்தனர். அவரும் மனைவியிடம் 2 குழந்தைகள் உள்ளனர். இனிமேலும் இந்த காதல் தேவையா? எனக்கூறி கண்டித்தார். ஆனால் ராதிகாவோ காதலனை தன்னால் மறக்க முடியவில்லை என தெரிவித்தார்.இதனால் வேறு வழியில்லாமல் காதலனுடன் சேர்த்து வைக்க முடிவு செய்தார். தனது விருப்பத்தை அவர் மனைவி மற்றும் கிராம மக்களிடம் கூறினார். முதலில் இதற்கு எதிர்ப்பு கிளம்பினாலும் பின்னர் அனைவரும் சம்மதம் தெரிவித்தனர். காதலர்களும் இதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டனர்.
நேற்று கோர்ட்டில் வைத்து ராதிகாவுக்கும், காதலனுக்கும் பப்லு திருமணம் செய்து வைத்தார். பின்னர் அங்குள்ள ஒரு கோவிலில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், உறவினர்கள் கண் முன் ராதிகாவும், காதலனும் மாலை மாற்றிக்கொண்டனர்.திருமணம் முடிந்ததும் பப்லு தனது மனைவியிடம் 2 குழந்தைகளையும் தான் வளர்க்க விரும்புவதாக தெரிவித்தார். இதற்கு ராதிகாவும் சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து 8 ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்திய மனைவியை பப்லு காதலனுடன் அனுப்பி வைத்து விட்டு 2 குழந்தைகளை தன்னுடன் அழைத்து சென்றார்.