மகாராஷ்ட்ரா மாநிலம் பர்பணி மாவட்டத்தில், 32 வயதான குண்ட்லிக் உத்தம் காலே என்பவர் தனது மனைவி மைனாவை தீயிட்டு கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 26ம் தேதி இரவு உத்தம் காலேவிற்கும், அவர் மனைவி மைனாவிற்கும் இடையே மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.அன்றைய தினம் மட்டுமன்றி உத்தம் காலேவுக்கும் அவரது மனைவி மைனாவிற்கும் மூன்று பெண் குழந்தை இருப்பது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் சம்பவத்தன்று நடந்த வாக்குவாதத்தில் உத்தம் காலே தனது மனைவி மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு கொளுத்தியுள்ளார். இதுதொடர்பாக மைனாவின் தங்கை போலீசில் புகார் அளித்துள்ளார்.உத்தம் காலே தன் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்ட பிறகு, மைனா அதனை தாங்கிக்கொள்ள முடியாமல் கத்தியவாறு வீடு முழுவதும் ஓடியுள்ளார்.
இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து, அவரை காப்பற்ற முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் அவருக்கு உடல்முழுவதும் தீ பரவி அதிக அளவில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. ஒருவழியாக போராடி அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருந்தபோதிலும், பாதிவழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது. சம்பவத்தை விசாரித்த காவல்துறையினர், குற்றம்சாட்டப்பட்ட உத்தம் காலேவை கைது செய்துள்ளனர். மூன்றும் பெண் குழந்தைகளாக இருப்பது தொடர்பாக நடந்த வாக்குவாதத்தில் கணவனே மனைவியை தீயிட்டு கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.