மத்தியப்பிரதேசத்தில் சுமார் 250.கி.மீ தூரம் ரயிலுக்கு அடியில் சக்கரங்களுக்கு நடுவே பயணம் செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர். இதனை கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்து, அவரை பாதுகாப்பாக மீட்டு ரயில்வே அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.மத்தியப்பிரதேச மாநிலம் ஜபல்பூ ரயில் நிலையத்தில் கடந்த 27 ஆம் தேதி அன்று வழக்கம் போல ரயில் பெட்டிகளில் சோதனை மேற்கொண்டுள்ளனர் ரயில்வே ஊழியர்கள். அப்படி, டானாபூர் எக்ஸ்பிரஸில் சோதனை மேற்கொள்ள தொடங்கியுள்ளனர்.அப்போது எஸ்4 கோச்சின் அடியில் ரயில் சக்கரங்களுக்கு நடுவே ஒரு நபர் மறைந்து உட்கார்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அவரை பிடித்து விசாரித்த ரயில்வே ஊழியர்களுக்கு, அவர் சொன்ன காரணத்தால் அதிர்ச்சி காத்திருந்தது.
காரணம் பிடிபட்ட அந்த நபர், இடார்சியில் இருந்து கிட்டதட்ட 50 கி.மீ தூரம் பயணித்து வந்துள்ளார். அதாவது 4 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் சக்கரங்களுக்கு இடையேயே தனது உயிரை பணயம் வைத்து பயணித்து வந்துள்ளார் என்று அதிர்ச்சி தரும் வகையில் தெரிவித்துள்ளார்.ஜபல்பூர் வருவதற்கு ரயில் டிக்கெட் வாங்க பணம் இல்லாததால் இவ்வாறு வந்ததாக அந்த நபர் தெரிவித்துள்ளார். இது அதிகாரிகளை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “புனே – தானாபூர் விரைவு ரயிலின் ஏசி-4 பெட்டியின் கீழே வழக்கத்துக்கு மாறான அசைவுகளை ரயில்பெட்டி மற்றும் வேகன் துறையை சேர்ந்த ஊழியர்கள் கவனித்தனர். இதையடுத்து ரயிலை நிறுத்துமாறு லோகோ பைலட்டிடம் கூறினர். சக்கரங்களுக்கு நடுவில் ட்ராலி பிரிவில் பதுங்கியிருந்த நபரை வெளியே வரவழைத்தனர். பிறகு அவரை பிடித்து ஆர்பிஎப் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்” என்றார்.மேலும், பிடிப்பட்டநபர் அளித்த பதில்களை வைத்து, அவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். RPF காவல்துறையினர் தொடர்ந்து அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுத்தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.