மஹாராஷ்டிராவில், ஸ்மார்ட்போன் வாங்கித் தராததால், 10ம் வகுப்பு மாணவன் துாக்கிட்டு இறந்த நிலையில், அதே கயிற்றில் தந்தையும் தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மஹாராஷ்டிராவின் லத்துார் மாவட்டத்தின்உத்கிரியில் உள்ள பள்ளியில் ஓம்கார், 16, என்ற சிறுவன், 10ம் வகுப்பு படித்து வந்தான். விடுதியில் தங்கி படித்து வந்த அந்த சிறுவன், பண்டிகை கொண்டாட்டத்துக்காக நாந்தேட்டில் உள்ள வீட்டிற்கு சமீபத்தில் வந்திருந்தான்.விவசாயியான தன் தந்தையிடம் படிப்பதற்காக ஸ்மார்ட்போன் வாங்கித் தரச் சொல்லி ஓம்கார் ஏற்கனவே கேட்டிருந்தான்.அவர் மறுத்த நிலையில், விடுமுறைக்கு வீட்டிற்கு வந்த சிறுவன், இது தொடர்பாக தன் தந்தையிடம் மீண்டும் முறையிட்டதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ‘விவசாயம் மற்றும் வாகனத்துக்காக வாங்கிய கடனே இன்னும் அடையாததால், தற்போது ஸ்மார்ட்போன் வாங்கித் தர முடியாத சூழல் நிலவுகிறது’ என, சிறுவனிடம் தந்தைதெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த சிறுவன் வீட்டைவிட்டு வெளியேறினான்.தங்களுக்கு சொந்தமான பண்ணைக்கு சென்றிருப்பான் என நம்பிய பெற்றோர், நள்ளிரவு வரை ஓம்கார் விடு திரும்பாததை அடுத்து பல்வேறு இடங்களில் தேடினர்.
மறுநாள் காலை பண்ணை வீட்டிற்கு மகனை தேடிச் சென்ற தந்தை, அங்கு, ஓம்கார் மரத்தில் துாக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து, மகனின் உடலை இறக்கி வைத்துவிட்டு, அதே கயிற்றில் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.அவர்களை தேடிச் சென்ற உறவினர்கள், தந்தை, மகன் தற்கொலை செய்ததை பார்த்து அதிர்ந்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்மார்ட்போன் வாங்கித் தராததாலேயே ஓம்கார் தற்கொலை செய்ததும், மகன் இழப்பை தாங்க முடியாமல் தந்தையும் தற்கொலை செய்ததும் தெரியவந்தது.