90 அடி உயரத்தில் உள்ள பழமைவாய்ந்த தண்டவாளத்தில் நின்று போட்டோஷூட் எடுத்த தம்பதி ரயில் வந்ததால் பள்ளத்தில் குதித்த ஜோடி

90 அடி உயரத்தில் உள்ள பழமைவாய்ந்த தண்டவாளத்தில் நின்று போட்டோஷூட் எடுத்த தம்பதி ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்தனர். இந்த தம்பதி மீது மோதாமல் இருக்க லோகே பைலட் பிரேக் பிடித்ததால் ரயில் அவர்கள் முன்பு நின்ற நேரத்தில் எங்கே மோதிவிடுமோ என்ற பயத்தில் அந்த தம்பதி 90 அடி பள்ளத்தில் குதித்தனர்.அதாவது ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் கி பிபாலியான் பகுதியை சேர்ந்தவர் ராகுல். இவருக்கு வயது 22. இவரது மனைவி ஜான்வி (வயது 20). இவர் 2 பேருக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் போட்டோஷூட் எடுக்க முயன்றனர். இதற்கு அவர்கள் தேர்வு செய்யத இடம் தான் ராஜஸ்தானில் உள்ள பாலி. இங்கு சிறப்பு என்னவென்றால் 90 அடி பள்ளத்துக்கு மேல் உள்ள மேம்பாலத்தில் தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்தது. இந்த தண்டவாளத்தை சுற்றி பசுமையான மரம் மற்றும் செடிகள் பாறைகளில் உள்ளன. இது பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இதனால் தான் இந்த இடத்தை அவர்கள் தேர்வு செய்து நேற்று போட்டோஷூட் எடுத்து கொண்டிருந்தனர்.

ராகுல் – ஜான்வி தம்பதி ரயில் மேம்பால தண்டவாளத்தில் நிற்க ராகுலின் அக்காள், மைத்துனர் ஆகியோர் போட்டோ எடுத்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வேளையில் யாரும் எதிர்பார்க்காத விதமாக திடீரென்று ரயில் அந்த தண்டவாளத்தில் வந்தது. இதனை கவனித்த ராகுலின் அக்காள் மற்றும் மைத்துனர் ஆகியோர் வேகமாக பாலத்தை விட்டு வெளியே வந்து தண்டவாளத்தின் ஓரத்தில் ஒதுங்கினர். ஆனால் ராகுல் – ஜான்வி தம்பதியால் சட்டென ஓடிவர முடியவில்லை. இதற்கிடையே ரயில் அவர்களை நோக்கி சென்றது. இந்த வேளையில் ரயில் மோதினால் உயிர் பிழைப்பது கடினம் என்பதை உணர்ந்த ராகுல் – ஜான்வி தம்பதி ஒன்றாக பாலத்தில் இருந்து 90 அடி பள்ளத்தை நோக்கி குதித்தனர். இதையடுத்து உடனடியாக போலீசார், தீயணைப்பு வீரர்கள் வரழைக்கப்பட்டு பள்ளத்தில் விழுந்த தம்பதியை மீட்டனர்.

அப்போது அவர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்திருந்தனர். ராகுலுக்கு முதுகில் படுகாயம் ஏற்பட்டது. ஜான்விக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ராகுல் ஜோத்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஜான்வி பங்கர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இவர்கள் 2 பேரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் கூறியிருந்தாலும் கூட அவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here