காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து மே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் இந்திய ராணுவம் பதிலடி தாக்குதல் நடத்தியது.இதைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் நாட்டவர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டது. அதே போல், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க தடை விதிப்பதாக அந்நாட்டு அரசு அறிவித்தது.இதனிடையே இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நிறுத்தம் தொடர்பாக புரிந்துணர்வு ஏற்பட்டது. இதனால் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் நீடித்து வந்த போர் பதற்றம் சற்று தணிந்துள்ளது. இருப்பினும் அரசு மற்றும் தூதரக ரீதியில் இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மேலும் ஒரு மாதத்திற்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (ICAO) விதிகளின்படி, ஒரு மாதத்திற்கு மேல் வான்வெளி கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது என்பதால், மே 23-ந்தேதி வரை இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் இந்திய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறப்பதற்கான தடையை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளதாகவும், இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.