கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக திரப்பனை பகுதியில் சுற்றித்திரியும் அக்போ என அழைக்கப்படும் காட்டு யானையை பிடித்து காட்டுப் பகுதிக்குள் விடுவிக்குமாறு அநுராதபுரம் வனஜீவராசிகள் பாதுகாப்பு உதவி பணிப்பாளருக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் நேற்று வியாழக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்.தனியார் தொலைக்காட்சி சேனலின் ஊழியர் ஒருவர் ட்ரோன் கமரா மூலம் யானையை புகைப்படம் எடுத்ததாக தொடரப்பட்ட வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போது, பாதுகாக்கப்பட வேண்டிய யானை பொதுமக்கள் இருக்கும் இடத்தில் விடப்பட்டுள்ளதாகவும், யானையை கிராமங்களுக்குள் சுற்றித் திரிந்து பயிர்களையும் சொத்துக்களையும் அழிக்க அனுமதித்தால் அதன் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவும் பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.அத்துடன், யானையின் உயிருக்கோ அல்லது மனித உயிர்களுக்கோ ஏதேனும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்க யானையை பிடித்து வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் காட்டுப்பகுதிக்குள் விடுவிக்குமாறு உத்தரவிடுமாறு பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தை கோரினார்.இந்நிலையில், யானையை காட்டுப்பகுதிக்குள் விடுவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதோடு, ஆளில்லா கமராவை பயன்படுத்தி யானையை புகைப்படம் எடுத்த சந்தேக நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு அநுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.