உள்ளூர் அதிகார சபைத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (08.04.2025) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், கடந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் கடமைகளை சிறப்பாக கடமையாற்றியதாகவும் அதற்கான நன்றியினைத் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டு, இம் முறை நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கடமைகளிலும் எம்முடன் இணைந்து ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார். மேலும் அஞ்சல் மூல வாக்களிப்பு நிலைமைகளில் பருத்தித்துறை நகர சபைக்கான 463 வாக்குச்சீட்டுப் பொதிகள் மற்றும் வேலணை பிரதேச சபைக்கான 305 வாக்குச்சீட்டுப் பொதிகளும் தபாலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், ஏனைய உள்ளூர் அதிகார சபைக்கான வாக்குச் சீட்டுப் பொதிகள் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய எதிர்காலத்தில் அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும், எதிர்வரும் ஏப்பரல் மாதம் 22 ஆம் திகதி பொலிஸ், மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும் ஏப்ரல் 23,24ஆம் திகதிகளில் பிற அரச நிறுவனங்களில் கடமையாற்றுபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் ஏப்ரல் 28,29ஆம் திகதிகளில் தவறவிட்ட வாக்காளர்களுக்கான மீள அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும் தெரிவித்துடன், தேர்தல் கடமைகளில் ஒருவரின் கவனயீனமான விடயங்களால்ஒருவரின் வாக்குரிமை பாதிக்கப்படக்கூடாது எனவும் தெரிவித்து தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார். இதன்போது உள்ளூராட்சி தேர்தலில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தாட்சிப்படுத்தும் அலுவலகர்களுக்கான கடமைகள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.இச் செயமலர்வில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று அத்தட்சிப்படுத்தம் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.