அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று (11)பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வைத்தியர்கள் இவ்வாறு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமென வைத்தியர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய பெண் வைத்தியர் நேற்று (10) தனது கடமைகள் நிறைவடைந்ததையடுத்து வைத்தியர்களுக்காக வழங்கப்பட்ட அவரின் தங்குமிடத்திற்குச் சென்றுள்ளார்.பின்னர் இரவு வேளையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அவரது தங்குமிடத்திற்குச் சென்று, அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகின்றது.சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.