அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள வைத்திய தொழிற்சங்க நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவருமாறு சுகாதார அமைச்சர் மருத்துவர் நலிந்த ஜயதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.சற்று முன்னர் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தின் அடிப்படையில், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட வைத்தியர்கள் குழு முன்னெடுத்துவரும் வேலைநிறுத்தப் போராட்டதை கைவிடுமாறும் சுகாதார அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். 36 மணி நேரத்திற்குள் சந்தேக நபரை நாங்கள் கைது செய்தோம். ஐந்து பொலிஸ் குழுக்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன. சந்தேக நபர் இருக்கும் பகுதி தொடர்பில் நேற்றிரவு எனக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, விசாரணைகள் நடத்தப்பட்ட பின்னர் இன்று காலை அவர் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து இப்போது விசாரணைகள் நடந்து வருகின்றன.
ஒரு அரசாங்கமாக சமூக ஊடகங்கள் மற்றும் ஊடகங்களிடம் கோரிக்கையை வைத்தோம். தயவுசெய்து பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டாம் என்று, ஊடகங்களும் அந்தப் பொறுப்பை அதே வழியில் நிறைவேற்றின. அதற்காக நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். எந்த ஊடகமும் அந்நபரின் அடையாளத்தை வெளியிடவில்லை. அவர்கள் தொடர்ந்து அவ்வாறு செய்வார்கள் என்று நம்புகிறேன்.
இன்று காலை நான் அனுராதபுரம் மருத்துவமனை வளாகத்தைச் சுற்றிப் பார்த்தேன். இந்த சம்பவத்தால் அங்குள்ள ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். எந்த பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து வழங்குவதற்கு நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
பாதுகாப்பு சேவையில் குறைபாடுகள் உள்ளன. அதைப் பற்றியும் கலந்துரையாடினோம். அனுராதபுரம் போன்ற பகுதிக்குச் செல்லும் வைத்தியர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்கள் ஒரு பெரிய தியாகத்தைச் செய்கிறார்கள். எனவே, எதிர்காலத்தில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று நம்புகிறோம்.”