சுற்றுலா நிமித்தம் இலங்கைக்கு வருகை தந்த இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒருவர், கற்பிட்டி பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்குவதற்காக இணையத்தில் அறை ஒன்றை பதிவு செய்துவிட்டு, அங்கு வந்து பார்த்த போது குறித்த ஹோட்டல் மூடப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அவர் கற்பிட்டி பொலிஸாரிடம் கடந்த 13 ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார்.இதுபற்றி விசாரித்த போது, அந்த ஹோட்டல் ஐந்து வருடங்களாக மூடிக் கிடப்பதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும், இது தனக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
கற்பிட்டி – தேதாவாடி பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா விடுதியில் தங்குவதற்காகவே குறித்த சுற்றுலா பயணி இணையத்தில் அறையொன்றை முன் பதிவு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.இதனால் தான் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக இந்த சுற்றுலா பயணி கற்பிட்டி பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.சுற்றுலா அறைகளை முன்பதிவு செய்யும் இணையதளம் மூலம் இந்த ஹோட்டலை தேர்வு செய்துள்ள அவர், 72,000 ரூபாவை முன்பணமாக இணையத்தில் செலுத்துமாறு தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த வெளிநாட்டு பிரஜை பணத்தை இணையத்தில் செலுத்தாமல் நேரில் வந்து செலுத்துவதாக கூறியுள்ளார்.
எனினும், குறித்த ஹோட்டலுக்கு வருகை தந்து பார்த்த போது, அந்த ஹோட்டல் கடந்த 5 வருடங்களாக பூட்டியே கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.இதனையடுத்து, குறித்த வெளிநாட்டு பிரஜைக்கு கற்பிட்டி பொலிஸாரினால் உதவியால் ஹோட்டல் ஒன்றில் வாடகைக்கு அறையொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.