இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை அராஜகமான ஒரு செயலாகவே தாம் கருதுவதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார் இழுவை மீன்பிடி நடவடிக்கை இலங்கையில் மாத்திரம் சட்டவிரோதமானது அல்ல எனவும் இந்தியாவிலும் தடைசெய்யப்பட்ட ஒன்று எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் உள்ள மீனவர்களும் இந்த மீன்பிடி நடவடிக்கைக்கு முழுமையான எதிர்ப்பை தெரிவித்து வருவதாகவும் ஒரு சிலரே இழுவை மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.இழுவை மீன்பிடியில் சாதாரண கூலித் தொழில் செய்யும் மக்களே ஈடுபடுவதாகவும் படகின் உரிமையாளர்கள் இந்திய அரசியல்வாதிகளாகவும் பணபலம் படைத்தவர்களாக உள்ளவர்களுமே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கூறினார்.இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கையின் போது மீனவர்கள் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுகின்றனர் என சுட்டிக்காட்டினார்.இழுவைத் தொழில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமானால் எதிர்வரும் 15 வருடங்களில் கடலில் எந்த விதமான தொழிலையோ மீன்பிடி நடவடிக்கையையோ முன்னெடுக்க முடியாது எனவும் கடலும் பாலைவனமாக மாறிவிடும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் கவலை வெளியிட்டார்.இவ்வாறான பாதகமான அழிவை தற்போது தமிழ்நாடு மீனவர்கள் முன்னெடுப்பதாக அமைச்சர் கூறினார்.இந்திய , இலங்கை மீனவர் விவகாரத்தில் இனி பேச்சுவார்த்தைகள் இல்லையென அமைச்சர் கூறினார் கடற்றொழில் அமைச்சில் உள்ள இலங்கை , இந்திய அதிகாரிகளுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளே நடைபெற்றுவருவதாகவும் குறிப்பிட்டார். இந்த பேச்சுவார்த்தைகளில் தொழிநுட்பம் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படுவதாக அமைச்சர் கூறினார்.