ஊழல்வாதிகள் மீண்டும் நாட்டில் அரசாங்கங்களை அமைப்பதற்கான வாய்ப்பு இல்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு நேற்று புத்தல நகரில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இதன் போது ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் உரையாற்றுகையில்,
“முன்னதாக தொழிலொன்றைப் பெற்றுக்கொள்வதற்குப் பணம் செலுத்த வேண்டும். வீதியை அமைப்பதற்குப் பணம் செலுத்தவேண்டிய நிலை காணப்பட்டது. இந்த அனைத்துச் செயற்பாடுகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.இருப்பினும் சில அதிகாரிகள் தற்போதும் பணம் பெறுவதாகத் தகவல் கிடைத்துள்ளது. நாம் வேதன அதிகரிப்பை வழங்கியுள்ளோம். ஆகவே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபடும் நிலையில் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் பெற்றுக்கொண்ட தொழிலை விரைவில் இழக்க நேரிடும்.
சுங்க அதிகாரிகள் நால்வர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்படவுள்ளனர். இவ்வாறுதான் இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும்.அரசியல்வாதிகள் உரிய முறையில் செயற்படுவார்களானால் அரச அதிகாரிகளை மாற்ற முடியும். அரசியல்வாதிகள் ஊழலில் ஈடுபட்டுக்கொண்டு அரச அதிகாரிகள் மாறவேண்டுமென்றால் அதற்குச் சாத்தியம் இல்லை. எனவே, இந்த நாடு மீண்டும் ஊழல்வாதிகளிடம் கையளிக்கப்படப் போவதில்லை.” என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.