கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும், நீதிமன்ற அனுமதி பெற்றே வெளிநாடு செல்ல முடியும் எனவும் அனுராதபுர மேல் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.அனுராதபுரம் நீதிமன்றத்தால் வழக்கு ஒன்று தொடர்பில் பிடியாணை பிறப்பிக்கட்ட நிலையில் நேற்று (21) நீதிமன்றத்திற்கு சென்று வந்த பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முள்ளிவாய்காலில் நடந்த அனர்த்தங்களையும், இராணுவம் செயத கொடூரமான செயற்பாடுகளையும் பொது வெளியில் பேசியதாக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளுடன் இணைந்து இலங்கை அரசாங்கத்திற்கு சதி செய்தேன் என்ற அடிப்படையில் எம்மை கைது செய்தார்கள்.
வவுனியாவிலும், அனுராதபுரத்திலும் வழக்குகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. கடந்த 16 ஆம் திகதி வழக்கு நடைபெற்ற போது நான் அதற்கு சமூகமளிக்கவில்லை. அதனால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. நேற்று அந்த பிடியாணையை நிவர்த்தி செய்வதற்காக நான் எனது வழக்கறிஞர் உடன் நீதிமன்றம் சென்றிருந்தேன்.அங்கு சென்று ஆயராகிய போது 25,000 ரூபாய் ஆட்பிணையும், எனது கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டிருந்தது. என்னோடு மரியசீலன் என்பவர் தொடர்ச்சியாக இந்த வழக்கில் சமூகமளித்துக் கொண்டிருக்கிறார். அவர் 8 வருடம் சிறையில் இருந்தவர்.
கடவுச் சீட்டை ஒப்படைக்க வேண்டும். வெளிநாடு செல்வதாக இருந்தால் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு 15 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது எனத் தெரிவித்தார்.