கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு, கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீது இன்று (26) நடந்த துப்பாக்கிச் சூடு குறித்து பாதுகாப்புப் பிரிவினர் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர்.இன்று காலை, மினுவங்கொடை – பத்தடுவன பகுதியில், கெஹெல்பத்தர பத்மே என்ற குற்றக் கும்பல் உறுப்பினரின் பாடசாலை நண்பர் என்று நம்பப்படும் 36 வயது நபர் மீது இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது கம்பஹா பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது காலிலும் கையிலும் துப்பாக்கிச் சூட்டு காயங்கள் காணப்படுவதுடன், அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று கம்பஹா மருத்துவமனையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடையவர் அல்ல என்றாலும், அவர் கெஹல்பத்தர பத்மேவின் நெருங்கிய நண்பர் என்பதால் துப்பாக்கிச் சூட்டை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சஞ்சீவவின் கொலைக்குப் பிறகு, அவரது கூட்டாளிகள், கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு வைத்திருந்தவர்களை பழிவாங்கப் போவதாக மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி, குற்றக் கும்பல்களுக்கு இடையே நடந்து வரும் பகை தீவிரமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த காலங்களில் பலர், குறிப்பாக பாதாள உலகத்தின் “காட்பாதர்களாக” மாற வேண்டும் என்ற நோக்கத்துடன், குற்றக் கும்பல் தலைவர்களைக் கொலை செய்யும் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.இருப்பினும், இன்றைய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக பல குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மினுவாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.