கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினைக்கு இரு சமூகங்களும் சுமூகமாகப்பேசித்தீர்வு காண வேண்டுமே தவிர, பலாத்காரமாக பாராளுமன்றத்தில் அழுத்திப் பேசுவதனூடாக தீர்வு காண முடியாதென சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரனுக்கு பதிலடி கொடுத்தார்.பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் மற்றும் மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சின் மீதான செலவு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்
தொடர்ந்து பேசிய அவர்,
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தல் தொடர்பில் சகோதர பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் சில விடயங்களை ஆக்ரோஷமாக முன்வைத்தார்.வழமையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்கள், குறிப்பாக தமிழரசுக்கட்சியின் இன்றைய உறுப்பினர் கோடீஸ்வரன் உட்பட பலரும் இது சம்பந்தமாக பல தடவைகள் பேசியிருக்கின்றார்கள்.இச்சபையிலும், சபைக்கு வெளியிலும் இது குறித்து நான் சிறிய விளக்கம் ஒன்றைக்கொடுக்க வேண்டும்.1990களில் அமைச்சரவையில் அங்கீகாரம் கொடுக்கப்பட்ட இவ்விவகாரம் ஏன் இதுவரையும் மேற்கொள்ளப்படவில்லை?, 33 வருடங்களாகியும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த விடாமல் அரசியல்வாதிகள் தலையீடு செய்கிறார்கள். என்றெல்லாம் குறை கூறப்படுகிறது.
உண்மைக்குப்புறம்பான இவ்விடயம் சம்பந்தமாக நான் உண்மையான விளக்கமொன்றை கொடுக்க வேண்டும். இது சம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸும், தமிழரசுக் கட்சியினரும் பல தடவைகள் எங்களுக்குள் பேசி இதைத்தீர்த்துக்கொள்வதற்கு முயற்சித்திருக்கின்றோம்.இது எல்லைப்பிரச்சினை சம்பந்தமான விவகாரம் மாத்திரமல்ல, கோடீஸ்வரன் குறிப்பிட்டது போன்று 29 கிராம சேவகர் பிரிவுகள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குள்ளாக வருகின்ற போதிலும்கூட, அதே அளவிலான கிராம சேவகர் பிரிவுகள் முஸ்லிம் பிரிவிலும் அதாவது கல்முனை பிரதான பிரிவிலும் அடங்குகிறது என்பது உண்மை தான்.
ஆனால், 29 கிராம சேவகர் பிரிவுகள் தலா இருக்கத்தக்கதாக 70% மான நிலப்பரப்பு இந்த 29 தமிழ்ப்பிரதேச செயலக பிரிவிற்குள் இருக்கின்ற காரணத்தினால் தான் பாரிய எதிர்ப்புக்கள் அப்பிரதேசத்து முஸ்லிம் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.
எல்லைப்பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ள கிராம சேகர் பிரிவுகள் சம்பந்தமான மீள் நிர்ணயமொன்றைச் செய்ய வேண்டும் விடயம் பேசப்பட்டு, தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அது சம்பந்தமான சில விதப்புரைகளும் செய்யப்பட்டிருக்கின்றன.ஏற்கனவே பல தடவைகள் அம்பாறை செயலக மட்டத்திலும், தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவினாலும் இது சம்பந்தமான விவகாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.எல்லைப்பிரிப்பது சம்பந்தமான பிணக்குகளை நாம் முதலில் பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும்.இரண்டு சமூகங்களுக்கிடையில் இருக்கின்ற ஒரு பாரிய பிரச்சனையாக இது மாறாமல், இதை நாங்கள் தீர்த்துக் கொள்வதற்கு இணக்கபூர்வமான முயற்சிகளில் பல தடவைகள் ஈடுபட்டிருந்தோம்.கடந்த அரசு காலத்தில் வஜீர அபேவர்தன அமைச்சராக இருந்த போது பல தடவைகள் கூடிப்பேசி, நாங்கள் இதற்கு ஒரு தீர்வு காண முடியுமா? என்று முயற்சி செய்த போதும் அது பலன்தரவில்லை என்பது கவலையான விடயமே.இருந்தாலும், இதைப்பலாத்காரமாக பாராளுமன்றத்தில் அழுத்திப்பேசுவதன் மூலம் தீர்த்துக் கொள்ள முடியாது. தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதிகள் ஒன்றாக அமர்ந்து, அமைச்சில் அதிகாரிகளோடு பேசி, இதற்கு நிரந்தரத்தீர்வு காண வேண்டும். இதனை பாராளுமன்றத்தில் ஆக்ரோசமாகப் பேசுவதால் மாத்திரம் முடிவுக்கு வராது.எனவே, இது சம்பந்தமான பிரச்சினைகளை எங்களுக்குள் நாங்கள் சுமூகமாகப் பேசித்தீர்வுகான வேண்டும் என்றார்.