Sunday, January 12, 2025
Homeஇலங்கைகிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பக தரப்புகள் முனைந்த போது குறித்த அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தலுக்காக 2016 ஆம் ஆண்டு அனுமதிக்கப்பட்டது. இதன் போது பிரதான சுடரினை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஏற்றி, மாவீரர் குடும்பங்களும் சுடர் ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது.இந்த நிலையில் தொடர்ந்து 9 ஆண்டுகளாக அஞ்சலிக்கப்பட்டு வருகின்றது. பல்லாயிரம் மக்கள் திரண்டு அஞ்சலிக்கும் குறித்த மாவீரர் துயிலுமில்லம் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கடந்த வருடம் பிரதான சுடர் ஏற்றுவதில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக குறித்த துயிலுமில்ல நிர்வகிப்பு தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டது.மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு, மாவீரர் துயிலும் இல்லங்கள் பொது மயப்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.இன்றைய தினம் கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் நிர்வாக தெரிவை நடத்த அழைப்பு விடுத்திருந்தனர். இந்த நிலையில், குறித்த பகுதிக்கு சென்றவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், தற்போது உள்ள நிர்வகிக்கும் தரப்பே தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இந்த நிலையில் குறித்த பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் அவ்வமைப்பின் அழைப்பில் சென்ற மக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.அப்பகுதியில் அமைதியின்மை தொடர்ந்த நிலையில் கிளிநொச்சி பொலிஸார் அங்கு சென்றனர். அப்பகுதியில் கூட்டமாக நிற்க வேண்டாம் எனவும், பிரச்சினைகள் இருப்பின் பொலிசில் முறைப்பாடு செய்யுமாறும் தெரிவித்து மக்களை வெளியேற்றினர்.படிப்படியாக அங்கிருந்த மக்களை வெளியேற்றிய பொலிஸார் அமைதியின்மையை கட்டுப்படுத்தினர்.

இதே வேளை, குறித்த துயிலுமில்ல வளாகத்திற்குள் அத்துமீறி செல்ல வேண்டாம் என்ற அறிவித்தலை கரைச்சி பிரதேச சபையினர் ஒட்டியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.குறித்த விடயம் தொடர்பில் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் சுப்பையா தெரிவிக்கையில், மக்களின் நினைவேந்தலை தடுக்கும் வகையிலும், நிகழ்ச்சி நிரல் ஒன்றின் அடிப்படையிலும் மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பு செயற்படுவதாக தெரிவித்தார்.அதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது. இதுவரை நடந்த நடைமுறைகளே பின்பற்றப்பட்டு நினைவேந்தல்கள் நடைபெறும். மக்கள் தெளிவாக செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகம் எனும் அமைப்பின் தலைவர் பார்த்தீபன் தெரிவிக்கையில், மக்கள் மயப்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.இன்று சிறிதரனுடன் தொடர்புடைய சிலர் அங்கு குழப்பங்களை ஏற்படுத்தினர். நாகரீகமற்ற வார்த்தைகளை பேசினர். தொடர்ந்தும் சிறிதரனின் அரசியலிற்குள் துயிலுமில்லங்களை அனுமதிக்க முடியாது.சிறிதரன் தனது வாக்குக்காக கனகபுரம், முழங்காவில், தேராவில், சாட்டி ஆகிய துயிலுமில்லங்களை பயன்படுத்துகிறார். அரசியலிற்குள் சிக்கியுள்ள துயிலுமில்லங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்.அதற்கான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க உள்ளோம் என தெரிவித்தார்.மாவீரர் துயிலுமில்லங்களை அரசியல் மயப்படுத்தி, முன்னாள் போராளிகளிற்குள் முரண்பாடுகள் ஏற்படுத்துவது தொடர்பில் பலரும் அதிருப்தி வெளியிடுகின்றனர்.

இதையும் படியுங்கள்:  மூட நம்பிக்கையால் பறிபோன உயிர் - பிரேத பரிசோதனையில் உயிருடன் வந்த கோழிக்குஞ்சு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!