கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.மட்டக்குளி, காக்கைதீவு கடற்கரைப் பகுதியிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களைக் காட்டுவதற்காக பொலிஸார் கைதுசெய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள் இருவரையும் அழைத்துச் சென்றபோது, பொலிஸாரிடமிருந்த துப்பாக்கியைப் பறித்து அவர்கள் இருவரும் சுட முயன்ற போதே பொலிஸார் பதில் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியும் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவ்வாறு உயிரிழந்த ஒருவர் பிலியந்தலையைச் சேர்ந்த அருண என்ற 32 வயதானவர் மற்றையவர் மட்டக்குளி, மோதரை பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என அடையாளம் காணப்பட்டுள்னர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க கூறுகையில்,21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் கொட்டாஞ்சேனையில் உள்ள ஒரு மொபைல் போன் கடைக்குள் சசிக்குமார் என்ற 38 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்டார்.துப்பாக்கிச் சூடு மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் மேற்கொள்ளப்பட்டது. சுடப்பட்ட நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு குற்றவாளிகளும் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்லும்போது பொலிஸாரால் துரத்திச் சென்று கைது செய்யப்பட்டனர்.”கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் துப்பாக்கியும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
21ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு தாமதமாக, சந்தேக நபர்கள் மறைத்து வைத்திருந்த ஏனைய ஆயுதங்கள் குறித்து பொலிசாருக்கு தகவல் அளித்ததை அடுத்து, அவர்கள் ஆயுதங்களை மறைத்து வைத்த பகுதிக்கு பொலிஸாரால் அழைத்துச் செல்லப்பட்டனர்.அங்கு, சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரிகளின் துப்பாக்கிகளைப் பறித்து அவர்களைச் சுட முயன்றனர்.பொலிஸ் அதிகாரிகள் நடத்திய தற்காப்பு துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்களும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்தார். அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.”