Saturday, February 22, 2025
Homeஇலங்கைசஞ்சீவ கொலை - கான்ஸ்டபிளின் கைப்பேசியில் இருந்த புகைப்படங்கள்

சஞ்சீவ கொலை – கான்ஸ்டபிளின் கைப்பேசியில் இருந்த புகைப்படங்கள்

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிளின் கையடக்கத் தொலைபேசியில் துப்பாக்கிச் சூட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியின் படங்கள் நீக்கப்பட்டிருந்த போதும், பொலிஸ் விசாரணை அதிகாரிகள் அவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு மேலதிகமாக, விசாரணை அதிகாரிகள் மற்றொரு துப்பாக்கியின் புகைப்படங்களையும் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிளின் கைப்பேசியை சோதனை செய்தபோது, ​​தற்போது தலைமறைவாகியுள்ள பெண் சந்தேகநபருக்கு சொந்தமானது என அடையாளம் காணப்பட்ட தொலைபேசி எண்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், மேலும் சோதனையிட்ட போது கைப்பேசியின் கேலரியில் இருந்த புகைப்படங்கள் நீக்கப்பட்டிருந்ததையும் விசாரணை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அதன்படி, மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ​​பாதாள உலகக் குழுத் தலைவரான கணேமுல்ல சஞ்சீவவைச் சுட துப்பாக்கிதாரி பயன்படுத்திய ரிவொல்வர் துப்பாக்கியின் புகைப்படங்களும், மற்றொரு கைத்துப்பாக்கியின் புகைப்படங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், காணாமல் போன சந்தேக நபரான பெண் சில வாரங்களுக்கு முன்பு அவருக்கு புகைப்படங்களை அனுப்பியது தெரியவந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சந்தேக நபரான பெண் தொடர்பில் மேற்கொள்ள்பட்ட விசாரணைகளின் போது, ​​குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்த நீர்கொழும்பு பொலிஸில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள், தொடர்பான தகவல்கள் கிடைத்ததை அடுத்து, கொழும்பு குற்றப்பிரிவின் சிறப்பு பொலிஸ் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார். கடந்த 19 ஆம் திகதி, கொழும்பு புதுக்கடை இலக்கம் 5 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ, சட்டத்தரணி வேடமணிந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.பின்னர் சந்தேக நபர் துப்பாக்கியை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து வாழைத்தோட்டம் பொலிஸார் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் முறைப்பாடு அளித்து முதற்கட்ட விசாரணைகளைத் ஆரம்பித்த நிலையில், பதில் பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்படும் என நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்ட மேலதிக அறிக்கையின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர், மஹரகமவில் உள்ள தம்பஹேன பகுதியைச் சேர்ந்த சமிந்து தில்ஷான் பியுமங்க கந்தனராச்சி என்ற முன்னாள் இராணுவக் கமாண்டோ வீரர், 8 மணி நேரத்திற்குப் பிறகு அதே நாளில் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் புத்தளத்தின் பாலாவி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர் கொழும்பு குற்றப்பிரிவிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், துப்பாக்கிதாரியிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நீர்க்கொழும்பு, கட்டுவெல்லேகம வீதியைச் சேர்ந்த பின்புர தேவகே இஷாரா செவ்வந்தி வீரசிங்க என்ற பெண் இந்த குற்றத்திற்காக துப்பாக்கியை கொண்டு வந்ததாக தெரியவந்தது. அதேபோல், தற்போது தலைமறைவாகியுள்ள பெண் சந்தேகநபரை கைது செய்ய பல பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்த சம்பவம் தொடர்பாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் முழு மேற்பார்வையின் கீழ் கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:  ஜோதிடம் பலிக்காததால் ஜோதிடரை கொன்ற பெண்- விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!