தேங்காய்களை இலகுவில் இறக்குமதி செய்ய முடியாது. அது சிக்கலான பிரச்சினையாகும். ஜனாதிபதி தலைமையில் வர்த்தக அமைச்சுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அரச காணிகளில் விளையும் தேங்காய்களை சதொச ஊடாக நிவாரண விலையில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் சமித வித்யாரத்ன தெரிவித்தார்.கொழும்பில் புதன்கிழமை (18) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
10,000 மேற்பட்ட ஏக்கருக்கும் மேற்பட்ட தென்னந்தோட்டங்களுக்கு சுமார் 5 ஆண்டுகளுக்கும் மேல் உரம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாகவே விளைச்சல் குறைவடைந்துள்ளது.55,000 மெட்ரிக் தொன் உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அந்த தொகையில் 25,000 மெட்ரிக் தொன் உரத்தை தேங்காய் விளைச்சலுக்காக வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.5 ஏக்கருக்கும் குறைவான தேங்காய் விளைச்சல் நிலங்களைக் கொண்டவர்களுக்கு அடுத்த வாரம் முதல் உரத்தை பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது மாத்திரமின்றி தெங்கு உற்பத்தி ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரிசியில் வண்டுகள் இருப்பதாகக் கூறப்படுகின்றமை தொடர்பில் ஆராயுமாறு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு, விலைகள் தொடர்பில் கண்காணிக்குமாறு நுகர்வோர் அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அரிசியின் தரத்தைப் பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.