கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் நிவாரணப் பொதி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த நிவாரணப் பொதி, இலங்கை மத்திய வங்கி, இலங்கை வங்கிகள் சங்கம், சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறையின் பிரதிநிதிகள் மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்களுடன் இணைந்து, வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்து பாதிக்கப்பட்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வணிக நடவடிக்கைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக தயாரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பிலான விபரங்களை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50% க்கும் அதிகமான பொருளாதாரத்தின் பங்களிப்பைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைக்க மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கியமான துறையாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை அடையாளம் காணப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல், கொவிட்-19 தொற்றுநோய், 2022 பொருளாதார சரிவு மற்றும் பிற வெளிப்புற தாக்கங்களைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளில் நாடு அனுபவித்த சமீபத்திய எழுச்சிகள், இந்த துறையினை கடுமையாக பாதித்துள்ளன.
அதனைத் தொடர்ந்து வருவாய் பின்னடைவு காரணமாக செலுத்த வேண்டிய கடன்களை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.இதன்காரணமாக பத்திரங்கள்,சொத்துக்களை வங்கிகள் பறிமுதல் செய்யும் துர்ப்பாக்கிய நிலைக்கு வழிவகுத்தது.இந்த அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு, சமீபத்திய காலங்களில் ஏற்பட்ட பாதகமான தாக்கத்தால் தங்கள் கடனைச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை வலுவூட்ட அரசாங்கத்தால் ஒரு நிவாரணப் பொதி தயாரிக்கப்பட்டுள்ளது