இம்மாதம் ஆறாம் திகதி யாழ்.மாவட்ட சுற்றாடல் பாதுகாப்புக் குழுவின் கூட்டத்தில் யாழ்.மாவட்டத்தில் அதிகரித்துள்ள ஒலிபெருக்கித் தொல்லை தொடர்பில் பொதுமக்களினால் தொடர்ச்சியாக மாவட்டச்செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு அமைவாக அதனை கட்டுப்படுத்திவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. இதனை மீறுவோர்மீது கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.இம்முடிவு பொலிசாருக்கும் எழுத்துமூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை மீறுவோர் தொடர்பிலான தகவல்களை பிரதேச செயலகங்களுக்கு தெரியப்படுத்தினால் அவர்கள் பொலிசாருக்கு அறிவித்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் அரச அதிபரினால் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
எனினும் பல பிரதேச செயலகப் பிரிவுகளில் ஓரளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது.சில பிரதேச செயலகப் பிரிவில் ஒலிபெருப்கிப் பாவனையின் மோசமான செயற்பாடுகள் தொடர்ந்தவண்ணமுள்ளது. இது குறித்து பிரதேச செயலர்களுக்கு தெரியப்படுத்தினாலும் பொதுமக்ளுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகள் ஒலிபெருக்கித்தொல்லையினால் தொடர்ச்சியாக பாதிக்ப்படுகின்றன.இம்மாதம் 16 ஆம் திகதி சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாதகல் புனித லூர்துமாமதா ஆலய திருவிழாவில் மாதகலிலிருந்து பண்டத்தரிப்பு சந்திவரை 3 கிலோமீற்றர் நீளத்திற்கும் அதிகமாக ஏராளமான ஒலிபெருக்கிகளை பொருத்தி இரவு பகலாக பயன்படுத்தப்பட்டன.
இதனால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளானார்கள். நேற்று (26-02-2025) இதே பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட விளான் – சண்டிலிப்பாய் வீதியலுள்ள பிரான்பற்று நரசிம்ம வைரவர் என்ற சிறிய ஆலயம் ஒன்றில் அன்னதான நிகழ்விற்காக 15 இற்கும் அதிமான ஒலிபெருக்கிகள் பொருத்தப்பட்டு நேற்றுமுன்தினம் இரவுமுதல் (25-05-2025) அதிக இரைச்சலுடன் ஒலி எழுப்பப்பட்டது. அத்துடன் இன்றையதினமும் அந்த பகுதியில் ஒலிபெருக்கி இசைக்கப்படுகிறது. இதனால் அருகிலுள்ளவர்கள் மட்டுமன்றி் அயல் கிராமங்களிலுள்ள மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டார்கள்.
இது குறித்து பொலிசாருக்கு அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலருடன் தொடர்புகொள்ள முயற்சி மேற்கொண்டபோதும் அது பலனளிக்கவில்லை. சுற்றாடலை பாதிக்கும் ஒலி மாசு தொடர்பில் மாவட்டச்செயலகத்தினல் எடுக்கப்பட்ட தீர்மானம் சில பிரதேச செயலகங்களுக்கும் பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்படவில்லையா அல்லது தீர்மானம் உதாசீனம் செய்யப்படுகின்றதா என பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.