எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளர் நாமல் ராஜபக்சவே என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.தமது கட்சியில் இருந்து விலகிய ஏனைய உறுப்பினர்களும் எதிர்காலத்தில் மீண்டும் கட்சியில் இணைவார்கள் என அவர் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாமல் ரபக்ஷவுக்கும் இடையில் இளைஞர் பாராளுமன்ற பிரதிநிதிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க இதனைத் தெரிவித்துள்ளார்.“இன்றும் பொதுஜன பெரமுனவின் வாக்குகள் மகிந்த ராஜபக்சவைச் சுற்றியே இருப்பதாக நாங்கள் நம்புகின்றோம். இப்போதும் எமது ஆசன அமைப்பாளர்களில் 90 வீதமானவர்கள் எம்முடன் உள்ளனர். 10 வீதமானவர்களே ஜனாதிபதியுடன் இணைந்தனர். அவர்களும் தற்போது ஆசன அமைப்பாளர்களைப் பெற வரிசையில் வந்துள்ளனர். எமது நண்பர்களும் எங்களுடன் இணையுமாறு அழைக்கிறோம். தெற்கில் பலம் வாய்ந்த வேட்பாளர் எங்களிடமே உள்ளார்” என்றார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.“நாங்கள் நாமல் ராஜபக்ஷவை வாழ்த்துகிறோம். கொள்கை விடயங்களுக்கு ஏற்ப ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறோம். பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மை உறுப்பினர்களால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி இந்த நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் கொண்டு வர பாடுபட்டார். அவர் செய்த செயல்களின் பலனைக் கொண்டு வர இன்னும் 5 ஆண்டுகள் அவர் செயல்பாட்டில் ஈடுபட வேண்டும் என்று எங்களில் பெரும்பான்மையானவர்கள் முடிவு செய்துள்ளோம். இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உருவாக்கிய நெருக்கடியின் பலனை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே அனுபவித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.