நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தான் நடுநிலை வகிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சில ஜனாதிபதி வேட்பாளர்கள் தனது ஆதரவை கோரியுள்ளபோதும் தான் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு வேட்பாளர்களை ஆதரிப்பதாக பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பதாக குறிப்பிட்ட அவர், 2024 ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு வேட்பாளர்களுக்கும் தனது ஆதரவை வழங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.
வாக்களிக்க முடிவு செய்யும் போது அனைத்து வாக்காளர்களும் தீவிரமாக சிந்திப்பதுடன், தனிப்பட்ட நபரை கருத்தில் கொள்ளாமல் ஒவ்வொரு வேட்பாளரும் நாடு தொடர்பில் முன்வைக்கும் செயற்றிட்டங்கள், நடைமுறைகளை கருத்தில் கொள்ள வேண்டும். திட்டங்களை செயற்படுத்த வேட்பாளர்கள் பயன்படுத்தும் அமைப்புகள், அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாக இருப்பவர்கள் தொடர்பிலும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அத்துடன் கல்வி, சுகாதாரம், விவசாயம் (குறிப்பாக சிறு விவசாயிகள்), சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கான கொள்கை தொடர்பிலும் வாக்காளர்கள் கவனம் செலுத்துவதுடன் நிறுவனங்கள், முக்கிய தொழில்கள் மற்றும் ஏற்றுமதிகளின் பல்வகைப்படுத்தல், பெருந்தோட்டத்துறை, சர்வதேச வர்த்தகம் மற்றும் சுற்றுலாத்துறை உள்ளிட்ட விடயங்களில் தாம் தெரிவு செய்யும் வேட்பாளர் கொண்டுள்ள நிலைப்பாட்டிலும் கவனம் செலுத்துவது முக்கியமாகும். இந்த விடயங்களில் வாக்காளர்கள் தாம் விரும்பும் வேட்பாளரிடமிருந்து உறுதிமொழியை கோருவதற்கு மறுக்க முடியாத உரிமை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.