ஜனாதிபதி தேர்தல் கடமைகளுக்கு 54,000 பொலிஸார்

ஜனாதிபதித் தேர்தல் கடமைகளுக்காக 54,000 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.வாக்கெடுப்பு நிலையங்கள், வாக்கு எண்ணும் நிலையங்களை நிர்வகித்தல், வாக்குப்பெட்டிகள் கொண்டு செல்லப்படுவதைக் கண்காணித்தல், ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் அவற்றைத் தீர்ப்பது, அசம்பாவிதங்கள் இன்றி தேர்தல் நடைபெறுவதை உறுதிசெய்தல் போன்ற பணிகளுக்காக நாடு முழுவதும் பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்படவுள்ளார்கள்.

நாடு முழுவதிலும் உள்ள 13,000 வாக்கெடுப்பு நிலையங்களிலும், 45 வாக்கு எண்ணும் நிலையங்களிலும் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அசங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.மேலும், தேர்தல் காலத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் பொலிஸார் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட 3,200 வாகனங்கள் பயன்படுத்தபடவுள்ளன.தேர்தல்கள் சட்ட மீறல்களை தடுக்க பொலிஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டிருந்த பதாகைகள் மற்றும் கட்அவுட்களை நீக்குவதற்காக 1,500 தொழிலாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். இதுவரை 1,69,358 சட்டவிரோத சுவரொட்டிகள், பதாகைகள் மற்றும் கட்அவுட்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், 61,062 சுவரொட்டிகள், 512 பதாகைகள் மற்றும் 793 கட்அவுட்கள் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் உள்ள 607 பொலிஸ் நிலையங்களில் தேர்தல் கடமைகளுக்காகவும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகளை விசாரிப்பதற்காகவும் தலா மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.மேலும், ஜனாதிபதி வேட்பாளர்களின் பாதுகாப்பிற்காக 260க்கும் மேற்பட்ட பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.250-க்கும் மேற்பட்ட தேர்தல் பேரணிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படும் நிலையங்களில் பாதுகாப்புக்காக பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here