எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.நேற்று புதன்கிழமை (04) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பொலிஸ் தலைமையகத்திற்கு இதுவரை 173 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 119 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 54 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.குறிப்பாக, நபர்களை தாக்கி காயப்படுத்துதல் மற்றும் சொத்துக்களை சேதப்படுத்துதல் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.இந்நிலையில், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறப்படும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 04 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.