ஜனாதிபதி வேட்பாளர்களுக்காக நடத்தப்படும் தேர்தல் கூட்டங்களில் பெருந்தோட்ட மக்களைப் பங்கேற்கச் செய்வதற்காகப் போத்தலில் அடைக்கப்பட்ட தரங்குறைந்த கள் விநியோகிக்கப்படுவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளாக ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்துள்ளார்.இந்த முறைப்பாடுகளை பெருந்தோட்டத்துறைமார் உள்ளிட்ட தோட்ட அதிகாரிகள் முன்வைத்துள்ளனர். தரங்குறைந்த கள் போத்தல் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதால் அவர்கள் உரிய வகையில் தொழிலுக்குப் பிரவேசிப்பதில்லை என்பதுடன் அவர்களின் வினைத்திறனும் குறைந்துள்ளதாக அந்த முறைப்பாடுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தரங்குறைந்த கள் போத்தல் வழங்கப்படுவதானது தேர்தல் சட்டத்தைக் கடுமையாக மீறும் செயல் என ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தரங்குறைந்த கள் இலவசமாக மக்களுக்கு விநியோகிக்கப்படுவதானது புகையிலை மற்றும் மதுசார சட்டத்திற்கமைய தவறாகும். தேர்தல் காலப்பகுதியில் பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகளவில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார தரப்பினர் தலையீடு செய்ய வேண்டும்.
அத்துடன் தரங்குறைந்த கள் விநியோகத்தின் மூலம் தேர்தல் சட்டம் மீறப்படுகின்றமை தொடர்பில் காவல்துறையினர் மற்றும் ஏனைய பொறுப்பு வாய்ந்த நிறுவனங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கண்காணிப்பு நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக அறிவுறுத்தியுள்ளார்.