தாய் இறந்த துக்கத்தையும் தாண்டி மனம் தளராது சாதனைப்படைத்துள்ள மாணவன் தொடர்பான நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று குருநாகல் பகுதியில் பதிவாகியுள்ளது.குருநாகல் மலியதேவ கல்லூரியில் வணிக பிரிவில் உயர் தரம் பயின்று வரும் நிபுன மனோத்யா கொடிக்கார என்ற மாணவரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
நிபுன பாடசாலை இல்ல விளையாட்டு போட்டியில் பங்கேற்றிருந்த நிலையில், அவரது அன்புத் தாயார், 42 வயதான பத்மினி மானெல், கடந்த பெப்ரவரி மாதம் 25 ஆம் திகதி காலமானார்.அவருடைய மறைவு நிபுனவுக்கு தாங்க முடியாத துக்கமாகவும் சவாலான தருணமாகவும் மாறியது.நிபுனவுக்கு அது மிகவும் வேதனையாக இருந்தது, ஏனென்றால் அவனுடைய ஒரே உறவினர் தாய் மாத்திரமே. அந்த சவாலான நேரத்தில், அவரிடம் எஞ்சியிருந்தது துணிச்சலான மன உறுதி மட்டுமே.
அவர் படித்த பாடசாலை, அவரைத் தனியாக விடாமல், அவருக்கு தட்டிக்கொடுத்து வலிமை சேர்த்தது.தனது தாயாரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகள் அனைத்தும் பாடசாலையால் ஒழுங்கமைக்கப்பட்டமை, அந்த நேரத்தில் நிபுனவுக்கு ஒரு பெரிய பலமாக இருந்தது.குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் சுமார் ஆறு நாட்களாக வைக்கப்பட்டிருந்த நிபுனவின் தாயாரின் உடல், கடந்த 3 ஆம் திகதி குருநாகல் மாநகர சபைக்குச் சொந்தமான இறுதிச் சடங்கு மண்டபத்தில் வைக்கப்பட்டு, குருநாகல் மலியதேவ கல்லூரியின் முயற்சியில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன.நிபுன தனது தாயாருடன் யந்தம்பலாவ பகுதியில் வசித்து வந்தாலும், தனது தாயாரின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல அவரால் முடியவில்லை.
அந்த நேரத்தில், அவர் கல்லூரியின் ராஜசிங்க இல்லத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விளையாட்டுத் தலைவராக இருந்தார்.ஒவ்வொரு வருடமும் உயரம் தாண்டுதல் போட்டியில் சாதனை படைத்து வரும் நிபுன, இந்த வருட விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனை படைக்கத் தயாராகி வந்தார்.இதற்காக நிபுனவை ஊக்குவித்த அவரது தாயார், தினமும் காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை அவருக்கு உறுதுணையாக இருந்தார்.
பாடசாலையில் இதுவரை நிலைநாட்டப்பட்ட சாதனையை தனது மகன் முறியடிப்பதைப் பார்ப்பதே அவருடைய ஒரே நம்பிக்கையாக இருந்தது.இந்நிலையில் அவரது தாயார் உயிரிழந்த நிலையில், அவரது உடல் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
மறுநாள் நிபுன அந்த போட்டியை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், கல்லூரியில் படிக்கும் ஒரு சகோதரனின் தாயாரின் தலையீட்டின் மூலம், வைத்தியசாலையின் ஊழியர்களின் உதவியுடன் அவரது தாயாரின் உடலை குருநாகல் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்க ஏற்பாடு செய்ப்பட்டது.ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து, அவரின் தாயின் நம்பிக்கையை நிறைவேற்ற, அனைத்தையும் தாங்கிக் கொண்ட நிபுன, உயரம் தாண்டுதல் போட்டியில் கல்லூரிக்காக புதிய சாதனை படைத்து, 28 ஆம் திகதி வெற்றியீட்டினார்.
ஆனால் அவரது வெற்றியைக் காண அவரது தாயார் உயிருடன் இல்லை என்பது அனைவருக்கும் தாங்க முடியாத தருணமாக இருந்தது.தனது தாயாரின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த நிபுன,
“என் அம்மா இறந்து பிரேத அறையில் இருந்தபோது நான் இந்த சூழ்நிலையை எதிர்கொண்டேன்.இந்த மாதிரியான சூழ்நிலை யாருக்கும் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. என்னைப் போல வலிமையாக இருந்து வாழ்க்கையை வெல்லுங்கள் என்று நான் எல்லோரிடமும் சொல்கிறேன்.
சொல்ல முடியாத விடயங்கள் நிறைய இருந்தாலும், அம்மாவின் ஆசையை நிறைவேற்றுவதே என் ஆழ் மனதில் இருந்தது.நான் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டு இந்த வெற்றியைப் பெற்றேன். பதினொரு வருடங்களாக இருந்து வந்த இந்த உயரம் தாண்டுதல் சாதனையை தற்போது முறியடித்துள்னே்.நான் பாடசாலையில் படைத்த முந்தைய சாதனை 1.81 மீட்டர். இந்த முறை, நான் 1.89 மீட்டர் தூரம் தாண்டி சாதனை படைத்தேன். எதிர்காலத்தில் அனைத்து இலங்கை சாதனையையும் முறியடித்து வெற்றி பெறுவதே எனது எதிர்பார்ப்பாகும்.
என் தம்பி தங்கைகளிடம், அவர்கள் என்ன தடைகளை எதிர்கொண்டாலும், கற்றுக் கொண்டே முன்னேறச் சொல்கிறேன்.”அந்தப் பயணத்தில், நமக்கு பொறுமை, உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும்.” என்றார்