கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி (19) இரவு ஓடும் அஞ்சல் தொடருந்தில் பயணித்த ஒரு பிள்ளையின் தந்தை தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக திம்புல பத்தனை காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.கொட்டகலை கங்கைபுரம் பகுதியைச் சேர்ந்த வெள்ளசாமி ஜெயக்குமார் என்ற 40 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை 4 மணியளவில் இரவு அஞ்சல் தொடருந்து கொட்டகலை தொடருந்து நிலையத்தை வந்தடைந்ததுடன், மீண்டும் பதுளை நோக்கி இயங்கும் போது, கொட்டகலை தொடருந்து நிலையத்திலிருந்து இறங்க முயன்று, தொடருந்திலிருந்து தவறி விழ்ந்து உயிரிழந்திருக்கலாம் எனக் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.அதிகாலை நானுஓயாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற தொடருந்தின் சாரதி கொட்டகலை மற்றும் தலவாக்கலை தொடருந்து நிலையங்களுக்கு இடையில் தொடருந்து பாதைக்கு அருகில் சடலமொன்றைக் கண்டு, பின்னர் சடலத்தை கொட்டகலை தொடருந்து நிலையத்திற்குக் கொண்டு சென்று ஒப்படைத்துள்ளார்.
உயிரிழந்த நபர் கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டகலைக்கு செல்வதற்கான பயணச் சீட்டு வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் திம்புல பத்தனை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.