இந்தியாவுக்கான மூன்று நாட்களைக் கொண்ட தமது உத்தியோகப்பூர்வ விஜயத்தை நிறைவுசெய்து கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்றிரவு நாட்டை வந்தடைந்தார். கடந்த 15ஆம் திகதி ஜனாதிபதி தனது உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவுக்கு சென்றிருந்தார். இந்த விஜயத்தின் போது அவர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, துணை ஜனாதிபதி, வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
அத்துடன், புதுடில்லியில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பாரிய வர்த்தகர்களுடனும் கலந்துரையாடியதுடன், இலங்கையில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழல் மற்றும் முதலீட்டுக்கான வாய்ப்புகள் குறித்தும் ஜனாதிபதி வர்த்தகர்களுக்குச் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க புத்த கயாவிற்கு சென்று மகா விகாரை மற்றும் ஸ்ரீ மஹா போதியைத் தரிசனம் செய்தார். அத்துடன், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவுடன் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடத்திய கலந்துரையாடலின் போது, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை வலுப்படுத்துவது தொடர்பில் இரு தரப்பினரும் கவனம் செலுத்தியிருந்தனர்.
இதேவேளை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவும் புதுடில்லியில் விடுத்த கூட்டறிக்கையை வரவேற்கத்தக்க விடயம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிக்கையொன்றை விடுத்துத் தெரிவித்துள்ளார்.இந்த அறிக்கையினூடாக இந்திய-இலங்கை ஒத்துழைப்பு ஸ்திரத்தன்மையை மேலும் பலப்படுத்தும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், திருகோணமலையை ஆற்றல் மற்றும் கைத்தொழில் மையமாக அபிவிருத்தி செய்து எட்கா எனப்படும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கையை முன்னெடுத்துச் செல்வதாக உறுதியளித்தமைக்கான ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை பாராட்டுவதாக அந்த அறிவிப்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.