2024 ஆம் ஆண்டின் இரண்டாவது மின் கட்டண திருத்தம் நாளை (16) முதல் அமுலுக்கு வரும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண திருத்தத்தின் சதவீதத்தை இறுதி செய்வதற்காக ஆணைக்குழு இன்று கூடும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின்சாரக் கட்டணங்களை காலாண்டுக்கு ஒருமுறை திருத்துவதற்கான அரசாங்கத்தின் கொள்கையின்படி, 2024 இன் முதல் திருத்தம் மார்ச் 04, 2024 அன்று 21.9% கட்டணக் குறைப்புடன் நடைபெற்றது. இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த முன்மொழிவை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மதிப்பாய்வு செய்து, தரவுகளை பகுப்பாய்வு செய்து, சமீபத்தில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை பரிசீலித்த பின்னர் இரண்டாவது திருத்தம் இன்று பின்னர் அறிவிக்கப்படும். புதிய கட்டணங்கள் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என்றும் நாளை (16) முதல் அமுல்படுத்தப்படும் என்றும் பேராசிரியர் பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.